அதிமுகவில் தலைமைப் பதவிக்கான போட்டி நிறைவடைந்து விட்டதாக ஒரு தோற்றம் உருவாகியுள்ள போதிலும், பிரதமர் நரேந்திர மோடியுடன் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் தனித்தனியாக சந்தித்த பிறகு கட்சியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. இந்தப் போட்டியை இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி நேரில் வந்து தொடங்கி வைக்கவுள்ளார். அவர் வருவது என்னவோ செஸ் போட்டியை தொடங்கி வைப்பதற்காகதான் என்றாலும், அதிமுகவினருக்கு மோடியின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியிருக்கிறது. ஏனெனில், அதிமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு காணும் மந்திரக் கோல் மோடியின் கையிலேயே இருப்பதாக அதிமுகவினர் நம்புகின்றனர்.
அதிமுகவில் யார் ஒற்றைத் தலைமை என்ற கேள்வி பல்வேறு களேபரங்களுக்கு வழிவகுத்தது. ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இருதரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர். இறுதியாக, அதிக மாவட்டச் செயலாளர்களின் ஆதரவைப் பெற்ற ஈபிஎஸ், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ்-ம், அவரது ஆதரவாளர்களும் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவுப்பட்டுள்ளது.
கட்சியில் தனது செல்வாக்கை நிலைநிறுத்த முடியாத விரக்தியில் உள்ள ஓபிஎஸ், தற்போது பிரதமரின் உதவியை நாடி வருகிறார். ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு, தர்மயுத்தம் நடத்தி பிரிந்து சென்ற ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் ஈபிஎஸ்-க்கு சுத்தமாக இல்லை. ஓபிஎஸ் இருப்பதை தனக்கு இடைஞ்சலாக கருதிய ஈபிஎஸ், அவர் இல்லாததை பயன்படுத்தி அதிமுகவின் ஒற்றைத் தலைமையாக மாற நினைத்தார். ஆனால், மோடியின் கரிசனப் பார்வை ஓபிஎஸ் மீது விழுந்ததால், மீண்டும் அதிமுகவில் அவரால் இணைய முடிந்தது. மோடியே நேரில் வந்து ஓபிஎஸ் – ஈபிஎஸ் கைகளை பிடித்து இணைத்து வைத்ததை தமிழகமே பார்த்தது.
இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது நிர்கதியாக இருக்கும் ஓபிஎஸ், மோடியின் கருணைப் பார்வையை மீண்டும் எதிர்பார்க்கிறார். இதனை தெரிந்து கொண்ட ஈபிஎஸ், அவருக்கு முன்பே மோடியை சந்திக்க திட்டமிட்டார். இதற்காகதான் அவர் அண்மையில் டெல்லி சென்றார். ஆனால் அவரால் மோடியை பார்க்க முடியவில்லை. இது, ஈபிஎஸ்-க்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.
இந்த பின்னணியில்தான், சென்னைக்கு வரும் பிரதமர் மோடியை எப்படியாவது சந்தித்து தங்கள் தரப்பு நியாயத்தையும், கோரிக்கையையும் வைக்க ஓபிஎஸ்-ம், ஈபிஎஸ்-ம் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், யாரை மோடி சந்திப்பார் யாரை புறக்கணிப்பார் என்ற குழப்பம் இருந்து வந்தது.
இந்த சூழலில் புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, இருவரையும் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பார் எனக் கூறப்படுகிறது. அந்த வகையில், பிரதமரை வரவேற்க ஈபிஎஸ் செல்வது என்றும், அவரை வழியனுப்ப ஓபிஎஸ் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. அந்த சமயத்தில், இருவரையும் தனித்தனியாக சந்தித்து பேச பிரதமர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மோடி உடனான ஓபிஎஸ் – ஈபிஎஸ்-ன் சந்திப்பு, அதிமுகவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் மைல் கல்லாக இருக்கும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM