டெல்லி: ஒன்றிய அரசு பணிக்காக கடந்த 8 ஆண்டுகளில் 22 கோடி பேருக்கு மேல் பதிவு செய்தும் வெறும் 7 லட்சத்து 22 ஆயிரம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்திருக்கிறது. வேலைக்காக விண்ணப்பித்தவர்களில் 1 விழுக்காட்டினருக்கும் குறைவாக மட்டுமே வேலை கிடைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த 18 மாதங்களில் 10 லட்சம் பேரை பணியமர்த்த இருப்பதாக ஒன்றிய அரசு ஜூன் 14ம் தேதி அறிவித்தது. அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு நிலைகள் குறித்து பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டதை தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இத்தகவலை வெளியிட்டது. ஆனால் 18 மாதங்களில் 10 லட்சம் பேரை நியமிக்கப்போவதாக அறிவித்திருப்பதை காட்டிலும் கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு துறைகளில் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது புள்ளி விவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., மக்களவையில் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் விளக்கம் அளித்திருக்கிறார். 2014 முதல் ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலைகளுக்காக 22 கோடியே 5 லட்சம் பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 2 கோடியே 75 பேர் விண்ணப்பித்திருக்கின்றனர். ஆனால் சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு 90,288 பேருக்கு மட்டும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2018 – 19ம் ஆண்டில் 38,100 பேரும், 2021- 22ம் ஆண்டில் 38,850 பேரும் மட்டுமே ஒன்றிய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு 8 ஆண்டுகளில் 7,22,311 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். 8 ஆண்டுகளிலும் விண்ணப்பித்தவர்களில் ஒரு விழுக்காட்டினருக்கும் குறைவாகவே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.