பெரம்பலூர் தீரன் நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட 8-வது மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு பேசினார். மாநாடு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முத்தரசன், “பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிடமிருந்து 3,200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தப்படுத்தியது மாநில அரசு.
அதில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திட்டங்களை தொடங்க வேண்டும். இல்லையென்றால் உரிய விவசாயிகளிடம் நிலத்தை திருப்பி ஒப்படைக்க வேண்டும். தி.மு.க அரசால் ஏற்கெனவே அறிவித்தபடி பெரம்பலூர் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்படும் சின்ன முட்லூ நீர்த்தேக்கத் திட்டத்தை கொண்டுவர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மிக முக்கியமான பிரச்னைகளாக இருக்கின்றன. இந்தியாவில் விலைவாசி உயர்வு கட்டுப்படுத்தப்படவில்லை என்றால் இலங்கையில் ஏற்பட்ட நிலைதான் இங்கும் ஏற்படும்.
அரிசி, பருப்பு, கோதுமை, தயிர் போன்ற பொருள்களுக்கெல்லாம் ஜி.எஸ்.டி வரித்திருப்பது சாமான்ய மக்களைக் கடுமையாக பாதிக்கும். இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தில் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி வருவது ஜனநாயகத்துக்கு எதிரான செயல்.
மக்களை பாதிக்காத அரசாக இருக்கவேண்டும். ஆனால் இங்கிருக்கும் மத்திய அரசு அப்படி இல்லை. மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு வந்த உடனே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இப்போதும் கடுமையாக எதிர்த்து வருகிறோம்.
பள்ளிக் கல்லூரி மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது நல்லதல்ல. மாணவ, மாணவிகள் மனநிலை பாதிக்கப்படுவதற்கான காரணத்தை கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நடவடிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.