வில்லன் ஆனார் வத்சன்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவியாளரான சரவணன் இயக்கத்தில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் அறிமுகமானவர் வத்சன். எங்கேயும் எப்போதும் படத்தில் ஆடிஷன் மூலம் வத்சன் தேர்வு செய்யப்பட்டார். அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்ட தயாரிப்பாளர் ஏஆர் முருகதாஸ் அவரது அடுத்த தயாரிப்பான “வத்திக்குச்சி”யில் முக்கிய கதாபாத்திரத்தில் வத்சனை பரிந்துரைத்தார்.

அதன்பிறகு பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வத்சன், குருதி ஆட்டம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதில் அதர்வா ஹீரோ. வில்லன் ஆனது பற்றி வத்சன் கூறியதாவது: ​8 தோட்டாக்கள் படத்தைத் தயாரித்த அதே தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் 'களவு' என்ற படத்தில் நடிக்கும் போது இயக்குநர் ஸ்ரீ கணேஷுடன் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டது.

அப்போதுதான் அவர் 'குருதி ஆட்டம்' பற்றிய விவரங்களையும், என்னை மனதில் வைத்து சேது கதாபாத்திரம் எழுதினார் என்பதையும் தெரிவித்தார். நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், எந்த ஒரு யோசனையும் இல்லாமல், அந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் என்னை ஒரு மிருகம் போல தோற்றமளிக்கும் வகையில் என் உடலை கட்டமைக்கச் சொன்னார். அவரது பார்வையின்படி, தோற்றத்தைப் பெற 5 மாதங்கள் ஜிம்மில் பயிற்சி பெற்றேன். நான் 35 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தேன். அதில் 25 நாட்கள் அதர்வாவுடன் நடித்த காட்சிகள்.

இந்த படத்தில் நடித்து வந்த சமயத்தில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது. ஆனால் அந்த கதாபாத்திரத்திற்காக எனது முடி, தாடி ஆகியவற்றை மாற்ற வேண்டிய சூழல். நான் என் நிலைமையைச் சொன்னேன். இயக்குநர் லோகேஷ் என்னைப் புரிந்துகொண்டு பாராட்டினார். விஜய்யுடன் 'மாஸ்டர்' படத்தில் நடிக்க முடியாமல் போன வருத்தம் எப்போதும் இருக்கிறது. என்கிறார் வத்சன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.