72 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் இன்று தொடக்கம்

பர்மிங்காம்,

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடத்தப்படுகிறது. 1930-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது.

ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டு திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் இன்று (வியாழக்கிழமை) தொடங்கி ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது.

இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கமாக இடம் பெறும் துப்பாக்கி சுடுதல் பலத்த எதிர்ப்பையும் மீறி நீக்கப்பட்டது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

18-வது முறையாக இந்த போட்டியில் கால்பதிக்க இருக்கும் இந்தியா இதுவரை 181 தங்கம் உள்பட 503 பதக்கங்கள் வென்று காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. 2002-ம் ஆண்டில் 69 பதக்கமும், 2006-ம் ஆண்டில் 50 பதக்கமும், 2010-ம் ஆண்டில் 101 பதக்கமும், 2014-ம் ஆண்டில் 64 பதக்கமும், 2018-ம் ஆண்டில் 66 பதக்கமும் இந்தியா வென்று அசத்தி இருக்கிறது.

இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு தலைமை தாங்க இருந்த நீரஜ் சோப்ரா விலகியதால் அவருக்கு பதிலாக ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி செல்வார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று அறிவித்தது.

தொடக்க விழா அணிவகுப்பிற்கான இந்திய அணியில் 164 வீரர், வீராங்கனைகள் இடம் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு கோஸ்டுகோஸ்டில் (ஆஸ்திரேலியா) நடந்த காமன்வெல்த் போட்டியில் இந்திய அணிக்கு சிந்து தான் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தி சென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.