நடிப்பு ராட்சசன் தனுஷின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய சுவாரஸ்யங்களில் சில இங்கே..
* இன்று ஹாலிவுட் வரை தெரிஞ்ச முகமாகி இருக்கிறார் தனுஷ். அவருக்கு வீட்டில் வைத்த பெயர், வெங்கடேச பிரபு. ‘துள்ளுவதோ இளமை’யில் எதிர்பாராமல் ஹீரோவாகிறார் அவர். அப்போது அவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்க நினைத்த கஸ்தூரி ராஜா, பல பெயர்களை பரிசிலீக்கிறார். அப்போது ‘குருதிப்புனல்’ படத்தின் ஆப்ரேஷன் தனுஷ், கஸ்தூரி ராஜாவை கவர்ந்திழுக்க, மகனுக்கு தனுஷ் என பெயர் சூட்டினார்.
* இப்போது தனுஷ் நடித்து முடித்த படங்களில் ‘திருச்சிற்றம்பலம்’ முதலில் வெளியாகிறது. இதனையடுத்து அண்ணனின் இயக்கத்தில் நடித்த ‘நானே வருவேனு’ம், அதனையடுத்து ‘வாத்தி’யும் வெளியாகிறது.
* தனுஷின் அறிமுக பட்டியலில் சில.. இந்தியில் முதலில் அறிமுகமான படம் ‘ராஞ்சனா’. அவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. ஸ்ருதிஹாசன் நடித்த ‘3’ல் தயாரிப்பாளரானார். எதிர் நீச்சல் படத்தில் முதன்முதலாக ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடினார். ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணனில் வரும் ‘நாட்டுச் சரக்கு’ பாடல் மூலம் பாடகராகவும் ஆனார். ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘காதல் என் காதல்..’ பாடல்தான் அவர் எழுதிய முதல் பாடல்.
* தனுஷ் அம்மா ப்ரியர். அவர் முதலில் வாங்கிய சம்பளத்தில் தன் அம்மாவுக்கு தங்க வளையல்களும், புடவையும் வாங்கிக் கொடுத்து மகிழ்ந்தார்.
* தனுஷின் கரியரில் மறக்க முடியாத பாராட்டு ஒன்று உண்டு. பாலுமகேந்திராவின் இயக்கத்தில் அவர் ‘அது ஒரு கனாக்காலம்’ படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் இது. ஒரு காட்சியில் தனுஷுக்கு டைட் க்ளோஸப் ஒன்றை வைக்கிறார் பாலுமகேந்திரா. ‘இவ்ளோ டைட் க்ளோஸப்பா?’ என தனுஷ் தயங்கியபோது, பாலுமகேந்திரா சொன்னது இது. “உன் ஸ்கின் டோன், எந்த ஒரு கேமராமேனும் ரசித்து லைட்டிங் வைக்கிற ஒன்று. இரண்டாவது, நீ ஒரு இத்தாலியன் மாடல் போல இருக்கிறாய்” என்று சொன்னார். அந்த பாராட்டு இன்று நிஜமாகியிருக்கிறது எனலாம்.
* படப்பிடிப்பில் ஒரு பாலிஸியை கடைபிடிக்கிறார் அவர். படப்பிடிப்பில் ரசிகர்களை அவர் சந்திப்பதில்லை. அங்கே அவருடன் புகைப்படம் எடுப்பதையும் அவர் உற்சாகப்படுத்துவதில்லை. ஸ்பாட்டுல போட்டோஸ் எடுத்தால் அந்த ரசிகர் சந்தோஷத்தில் அடுத்த நாளே பலரையும் அழைத்து வந்துவிடுவார். இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்படும். தயாரிப்பாளருக்கு நெருக்கடியாகும் என்பதால்தானாம்.