இன்று வெளியாகியுள்ள ‘தி லெஜண்ட்’ திரைப்பட ஹீரோ லெஜண்ட் சரவணா அருள் பெயரில் ரசிகர் நற்பணி இயக்கத்தை தொடங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார்கள் மதுரைக்காரர்கள்.!
கூத்து, நாடகம் பிரபலமாக இருந்த அந்தக் காலம் முதல் திரைப்படங்கள் வரத் தொடங்கி தியாகராஜ பாகவதர், டி.ஆர் மகாலிங்கம், எம்.ஜி.ஆர், சிவாஜி என நடிகர்கள் வந்த காலத்திலும் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், மோகன், முரளி என தொடர்ந்து தற்போது விஜய், அஜீத், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என நூற்றுக்கணக்கான நடிகர்கள் வந்தாலும் அனைவரின் படங்களையும் பார்த்து ரசிப்பது மட்டுமில்லால் அவர்களுக்கு முதல் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி கொண்டாடி மகிழ்வார்கள் மதுரைக்காரர்கள்.
அபிமான நடிகர்களுக்கு தொடங்கப்படும் ரசிகர் மன்றங்கள் அடுத்த கட்டமாக அரசியல் கட்சி அலுவலகமாக மாறுவதும் மதுரையில்தான். திரையரங்குகளில் கொடி கட்டும் ரசிகர்கள் அடுத்ததாக மாநாடுகளில் கொடி கட்டுவார்கள்.
ஹீரோ நடிகர்கள் என்று மட்டுமல்ல, நடிகைகள், வில்லன், குணச்சித்திர நடிகர், காமெடியன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், கலை இயக்குநர், சண்டை பயிற்சியாளர் என ஒரு ஆள் விடாமல் ரசிகர் மன்றம் தொடங்குவார்கள்.
அர்னால்ட், சில்வர் ஸ்டோலன், ஜாக்கி சான், ஜாக்கி ஷெராப், அமீர்கான், பிரித்விராஜ், அல்லு அர்ஜுன் என்று ஒருத்தரையும் விடமாட்டார்கள். அப்படிப்பட்ட பெருமைக்கு சொந்தக்காரர்களான மதுரைக்காரர்கள் தமிழகத்தை பரபரப்பாக்கியுள்ள லெஜெண்ட் சரவணனை மட்டும் விட்டு வைப்பார்களா?
மதுரை திரையரங்க வரலாற்றிலயே புதுமுக நடிகரின் படம் அதிகாலை 4 மணி முதல் ரசிகர் காட்சியாகத் திரையிடப்படுவது இதுவே முதல் முறை என்கிறார்கள். நகரின் பல திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்தாலும் மதுரை கோபுரம் சினிமாவில் அனைத்துக் காட்சிகளும் தி லெஜண்ட்தான்.
இந்நிலையில் மதுரையில் பல இடங்களில் அகில உலக, அகில இந்திய லெஜண்ட் சரவணன் ரசிகர் மன்ற விளம்பரங்கள் தென்படுகிறது. புதிய மன்றம் தொடங்க தொடர்பு கொள்ள அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.
‘படம் வெளியான நாளிலயே ரசிகர் மன்றம் எப்படி?’ என்று, மதுரை மாநகர் மாவட்ட லெஜண்ட் சரவணன் நற்பணி இயக்க நிர்வாகி சுரேஷிடம் கேட்டோம்.”திரைக்கலைஞர்களை கொண்டாடுபவர்கள் மதுரை மக்கள். அது மட்டுமில்லாமல் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். அவர் நடிக்கும் படம் நன்றாகத்தான் இருக்கும் என்பதால் அவர் பெயரில் நற்பணி இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்” என்றார்.
எந்த பிரச்னை எப்படியிருந்தாலும் சினிமாக்காரர்களுக்கு முதல் ரசிகர் மன்றம் தொடங்குவதில் நாங்கள் என்றைக்கும் முதல் இடம்தான் என்று மதுரைக்காரர்கள் நிரூபித்துள்ளார்கள்.