மருத்துவ மாஃபியாக்களுக்கு எதிராக மக்கள் விஞ்ஞானி ஒருவர் சர்க்கரை நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதே ‘லெஜெண்ட்’ படத்தின் கதை.
மருத்துவத் துறையில் அளப்பரிய சாதனைகளைச் செய்துவிட்டு ஊர் திரும்புகிறார் சரவணன். சர்க்கரைக் குறைபாட்டால் இன்சுலின் மருந்து போட்டுக்கொள்ளும் பிரச்னை அந்த ஊரில் இருக்கும் ரோபோ சங்கர் குடும்பத்துக்கு இருக்க, அதைக் கண்டு துவண்டுபோகிறார். வில்லனாக வரும் சுமன் ஒரு பக்கம் மருந்து மாஃபியாவுக்காக, புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க மனிதர்களைச் சோதனை எலிகளாக வைத்து கூடாரம் ஒன்று நடத்துகிறார். இதற்கிடையே சரவணனுக்குத் துளசியைக் கண்டதும் காதல். சரி, ரொம்பவும் சுத்த வேண்டாம். ரஜினி நடித்த சிவாஜி படம் பார்த்திருக்கிறீர்களா, அதில் ரஜினிக்குப் பதில் சரவணனையும், இலவச கல்விக்குப் பதில் இலவச சர்க்கரை குறைபாடு மருந்தையும், வேட்டி சட்டை சுமனுக்குப் பதில், மாடர்ன் டிரஸ் சுமனையும் இணைத்துவிட்டால், ‘தி லெஜெண்ட்’ படம் ரெடி.
படத்தின் நாயகன் சரவணனாக அருள் சரவணன். நாயகி துளசியாக கீத்திகா, மதுவாக ஊர்வசி ரௌட்டெலா. தமிழ் சினிமாவில் இருக்கும் ஒட்டுமொத்த துணை கதாபாத்திர கோஷ்டியையும் லாரியில் மொத்தமாய் கடத்திவந்து செட்டுக்குள் இறக்கியிருக்கிறார்கள். விஜயகுமார், சச்சு, விவேக், ரோபோ ஷங்கர், மயில்சாமி, யோகி பாபு, முனிஸ்காந்த், தீபா, தம்பி ராமையா, தேவதர்ஷினி, பிரபு, நாசர், ஹரிஷ் பேரடி, வம்சி கிருஷ்ணா, லிவிங்ஸ்டன், லதா, சிங்கம்புலி, மன்சூர் அலிகான், அஷ்வத் குமார், மானஸ்வி, அமுதவாணன் என ஒட்டுமொத்தமாய் வருகிறார்கள். வந்த வேகத்தில் போகிறார்கள். பெரும்பாலும் இவர்களின் ஒரே வேலை ஹீரோவுக்குத் துதி பாடுவது. என்ன துதி பாடி முடிப்பதற்குள் க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது. இவர்கள் பத்தாதென லக்ஷ்மி ராய், யாஷிகா ஆனந்த் என ஒரு பாடலுக்கு ஆடும் நாயகிகள் லிஸ்ட் தனி. இவர்களுக்கு நடுவே படத்தின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி எனச் சின்ன சின்ன கேமியோக்கள் வேறு. இன்னும் யாரெல்லாம் படத்திற்குள் ஒளிந்திருக்கிறார்கள் என யாமறியோம் பராபரமே!
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ‘மொசலு’ பாடல் ஏற்கெனவே செம்ம ஹிட். பார்த்த வீடியோவை மட்டும் விரைவில் மறந்துவிட்டால், என்றென்றைக்கும் நீங்காத ஹிட் பாடலாக நினைவில் நிற்கும். இந்தக் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்கள் ஜேடி – ஜெர்ரி. பல நூறு விளம்பரங்களை எடுத்திருக்கும் இந்த இயக்குநர் இணை, படத்தின் சில காட்சிகளையும் பற்பல கட் எல்லாம் செய்து, காஸ்ட்லி செட்கள் அமைத்து விளம்பரம் போலவே எடுத்திருக்கிறார்கள். ஆனால் படத்தில் வரும் பன்ச் வசனங்களும் அதே விளம்பர பாணியில் இருப்பதால், ‘ஓ இந்த விளம்பரம் முடிஞ்சதும் அடுத்து நல்லதா ஒரு சீன் வரும்போல’ என நாம் கேசுவல் மோடுக்குச் செல்ல வேண்டியதிருக்கிறது.
படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் சரவணனுக்கு இருக்கலாம். அதே சமயம், நடிப்புக்கான குறைந்தபட்ச முயற்சி என எதையாவது செய்திருக்கலாம். ஆக்ஷன், சென்டிமென்ட், கோபம், அழுகை, விரக்தி என எல்லா உணர்வுகளையும் வெளிப்படுத்தி நடிப்பதற்கான காட்சிகள் எழுத்தில் இருக்கின்றன. ஆனால், அவரோ எல்லாவற்றுக்கும் ஒரே ரியாக்ஷனை மட்டுமே பரிசாகத் தருகிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு, வைரமுத்து, கார்க்கி, பா.விஜய், சினேகன், கபிலன் பாடல்கள், அனல் அரசு சண்டைக் காட்சிகள் எனத் தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த டெக்னிக்கல் குழுவும் படத்தில் இருக்கிறது. ஆனால், அதற்கான தேவை என்பது படத்தில் சுத்தமாய் இல்லை என்பதே சோகம்.
இவர்கள் எல்லாம் போதாதென எண்டு கிரெடிட்ஸில் ‘சயின்ஸ் கன்சல்டண்ட்’ என ஒரு மருத்துவர் பெயரும் வருகிறது. ‘சயின்ஸா’ அப்படியொரு சப்ஜெக்ட் இதுவரைக்கும் இந்தப் படத்துல வரவே இல்லையே என நாம் தனியாக அங்கலாய்க்க வேண்டியதிருந்தது. “இப்ப நான் சயின்டிஸ்ட் இல்லடா” என க்ளைமாக்ஸில் சரவணன் இன்னொரு பன்ச்சைக் கொளுத்திப்போட, ‘அதைத்தான் நாங்களும் சொல்றோம்’ என நாம் கோரஸாகப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒரு படத்தின் காட்சிகளை யாராலும் எளிதாக நக்கல் அடித்துவிட முடியும். மீம்களாக போட முடியும். ஆனால், ஒரு முழு படத்தையுமே மீம்மாக, நக்கல் அடிக்கும் கன்டென்டாக எடுத்து வைத்தால் என்னதான் செய்வது?!
நமக்கு இருக்கும் ஆயிரம் பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தப் படத்தைப் பார்த்தால், நிச்சயம் விழுந்து விழுந்து சிரிக்கலாம் என்பது ஒரே ஆறுதல். என்ன நகைச்சுவை காட்சிக்கு முறைத்தும், சண்டைக் காட்சிக்குச் சிரித்தும், எமோஷனல் காட்சிக்கு விழுந்து விழுந்து சிரித்தும் எனப் படத்தில் வரும் உணர்ச்சிக்கு நேர் எதிரான உணர்ச்சிகளையே நாம் தர வேண்டியதிருக்கும். அந்த வகையில் இந்தப் படம் நமக்கானதொரு சோதனைக்களம். கவலை மறந்து சிரிக்கலாம். ‘இதைவிடவா ஒரு பெரிய பிரச்னை நம் வாழ்வில் வந்துவிடப்போகிறது’, என்னும் உத்வேகத்தை இந்தப் படம் நிச்சயம் நமக்குக் கொடுக்கும். டோன்ட் மிஸ்!