வாஷிங்டன்,
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளனர். ஐந்தாவது முறையாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளிடையேயான உறவில் பதட்டமான சூழல் நிலவும் நிலையில் இரு தலைவர்களுக்கும் இடையே இந்த உரையாடல் நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார். பருவ நிலை மாற்றம் மற்றும் சுகாதார பாதுகாப்பு உள்பட இரு நாடுகளும் இணைந்து செயல்படக் கூடிய பகுதிகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும் கூறப்படுகிறது.
இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு, இரு நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, சர்வதேச அளவில் நன்மை பயக்கும் என்று அமெரிக்க அதிபர் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டார். தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை என்றும், அந்த பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எதிரான ஒருதலைப்பட்ச முயற்சிகளை அமெரிக்கா கடுமையாக எதிர்க்கிறது என்றும் பைடன் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்துள்ளன.