லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசு பள்ளி ஆசிரியைக்கு மாணவர் ஒருவர் கைகளை அமுக்கி விடும் காட்சிகள் வெளியான நிலையில், ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் போகரியில் அரசு ஆரம்பப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அங்கு உதவி ஆசிரியையாக பணிபுரிந்து வந்த ஊர்மிளா சிங் என்பவர் வகுப்பறையில் உள்ள பள்ளி மாணவன் ஒருவனை, தனது கைகளை அமுக்கி விடும்படி கூறியுள்ளார். இதனால் மாணவரும் ஆசிரியையின் கைகளை அமுக்கிவிட்டுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் ஆசிரியை மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதன்பேரில் கல்வித்துறை அதிகாரி சஞ்சீவ் குமார் விசாரணை நடத்திய நிலையில், அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.