பெங்களூர்; கர்நாடகாவின் மங்களூரில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சூரத்கால் என்ற புறநகர் பகுதியில் சென்று கொண்டிருந்த முகமது பாஷில் என்பவரை அடையாளம் தெரியாத சிலர் ஆயுதங்களுடன் தாக்கியதில் அவர் உயிரிழந்ததாக மங்களூரு காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதையடுத்து மங்களூருவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளதாகவும் குற்ற வாளிகளை தேடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தட்சிணகன்னடா மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா இளைஞரணி பிரமுகர் அன்மையில் கொல்லப்பட்டதை தொடர்பாக 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சூழலில் தற்போது மங்களுருவில் படுகொலை நடந்துள்ளது. இதற்கிடையே கர்நாடகாவில் தேவைப்பட்டால் உத்திரபிரதேச முதல்வர் யோகியின் வழியை பின்பற்றுவோம் என முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உத்திரபிரதேசத்தில் கலவரத்தில் ஈடுபடுவோரின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிப்பதாக சர்ச்சை எழுந்தது குறித்து பொம்மை மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.