சென்னை: குடியரசு தலைவர் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறிய கருத்து தொடர்பாக, நாடாளுமன்றத்தில், ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அமளி ஏற்பட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் திங்கள் கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி முதல்தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பமானது முதலே, விலைவாசி உயர்வு , ஜிஎஸ்டி , அக்னிபாத் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. மேலும் சோனியாகாந்தியை, அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்தை கண்டித்தும் காங்கிரஸ் உள்பட எதிர்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் 27 எம்.பி.க்களை அவை தலைவர்கள் சஸ்பெண்டு செய்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் கூறிய கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் மன்னிப்பு கோர வேண்டும் என பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை மக்களவைக் கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீண்டும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பாஜகவை சேர்ந்த பெண் உறுப்பினர்கள் சிலர் அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக குரல் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த கீர்த்தி சோலங்கி பலமுறை கேட்டுக் கொண்டார். இருந்தபோதிலும் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால, முதலில் 12 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய நிலையில் தொடர்ந்து உறுப்பினர்களின் அமளி நீடித்ததால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி கோஷமிட்டனர். பின்னர் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குடியரசுத் தலைவர் குறித்து தவறாக பேசிய காங்கிரஸ் உறுப்பினருக்காக அக்கட்சித் தலைவர் சோனியாகாந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக உறுப்பினர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர். உறுப்பினர்கள் அமளியால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டதை அடுத்து, மக்களவை போலவே முதலில் நண்பகல் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் மாநிலங்களவையும் ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, நாடாளுமன்றம் மீண்டும் திங்கள் கிழமையே கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.