சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து “2024க்கு பிறகு” வெளியேறச் சோவியத் ரஷ்யா முடிவு செய்துள்ளது என்று மாஸ்கோவின் விண்வெளி ஏஜென்சியின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஜனாதிபதி விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார். இதற்கான காரணம் என்ன? இதனால் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?
உக்ரைனில் மாஸ்கோவின் ராணுவ தலையீடு மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான முன்னறிவிப்பில்லாத பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து கிரிம்ளினுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்து வந்தன. இதனை அடுத்து இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது ரஷ்யா.
1998-ம் ஆண்டு முதல் சுற்றுப்பாதையில் இருக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (International Space Station – ISS) ரஷ்யாவும் அமெரிக்காவும் அருகருகே பணியாற்றி வருகின்றன.
இதனைப் பற்றி ரஷ்யாவின் நாசா (NASA) என்றழைக்கப்படும் ரோஸ்கோஸ்மோஸின் தலைவராக நியமிக்கப்பட்ட யூரி போரிசோவ் புதினிடம் பேசியபோது, “நிச்சயமாக, கூட்டாணிக்கான அனைத்து கடமைகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். ஆனால் 2024க்கு பிறகு இந்த நிலையத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளோம். மேலும் ரஷ்யாவிற்கு என ஒரு ஆர்பிட் நிலையம், அதாவது சுற்றுப்பாதை நிலையத்தை உருவாக்கத் தொடங்குவோம். இதுவே தற்காலத்தில் எங்களது முன்னுரிமை” என்று கூறியுள்ளார். இந்த முன்னெடுப்புக்கு “நல்லது” என்று விளாடிமிர் புதின் பதிலளித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் பிற இடங்கள் மீதான பதற்றங்களால் ரஷ்யா உலக அமைப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை விதித்திருக்கின்றன. ஆனால், விண்வெளி ஆய்வைப் பொருத்தவரை, குறிப்பாகச் சர்வதேச விண்வெளி நிலையம் என்று வரும்போது ரஷ்யாவும் அமெரிக்காவும் இன்றுவரை இணைந்தே செயல்பட்டு வருகின்றன. ஆனால் விண்வெளித் துறை தற்போது “கடினமான சூழ்நிலையில்” இருப்பதாக போரிசோவ் கூறியுள்ளார்.
வழிசெலுத்தல் (navigation), தகவல் தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றம் போன்றவற்றைச் சுட்டிக்காட்டி, “தரத்தை உயர்த்தவும், முதலில் ரஷ்யப் பொருளாதாரத்திற்குத் தேவையான விண்வெளி சேவைகளை வழங்கவும் முயல்வோம்” என்றும் அவர் கூறியுள்ளார்.
1961-ல் முதல் மனிதனை விண்வெளிக்கு அனுப்பியது மற்றும் அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது போன்றவை சோவியத் விண்வெளி துறையின் முக்கிய சாதனைகளாக இருக்கின்றன. தற்போதைய ரஷ்ய விண்வெளி நிறுவனம் அதற்கு முந்தைய சோவியத்தின் பிரதிபலிப்பாகவே பார்க்கப்பட்டாலும் சமீபத்திய ஆண்டுகளில் ஊழல் மோசடிகளும் பல செயற்கைக்கோள்கள் மற்றும் விண்கலங்களின் இழப்பும் ஏற்பட்டு, தொடர்ச்சியான பின்னடைவுகளை இந்த அமைப்பு சந்தித்து வருகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த மாற்றம், சரியான முன்னெடுப்பாக இருக்குமா என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது.