செஸ் ஒலிம்பியாட் ஜோதியை காஷ்மீர் வழியாக கொண்டு செல்லவதா? தொடரை புறக்கணித்த பாகிஸ்தான்

லாகூர்,

44-வது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த மாமல்லபுரம், பூந்தேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர அரங்கில் இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தொடக்க விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. துவக்க விழாவில் பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை துவக்கி வைத்தனர்.

முன்னதாக, செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஜோதி இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இறுதியாக மாமல்லபுரத்திற்கு வந்தடைந்தது. அந்த ஜோதியை பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டனர்.

இதற்கிடையில், செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் உள்பட 188 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர், வீராங்கனைகளும் சென்னை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் நேற்று நடந்த துவக்க விழாவில் பங்கேற்பதாக இருந்தது.

ஆனால், கடைசி நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடரில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவே பாகிஸ்தான் செஸ் வீரர், வீராங்கனைகள் அனைவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பாகிஸ்தான் புறப்பட்டனர்.

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்காதது குறித்து பாகிஸ்தான் வெளியுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஜம்மு-காஷ்மீர் வழியாக கொண்டு செல்லப்பட்டதாலேயே பாகிஸ்தான் இந்த தொடரில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் ஜோதி கடந்த மாதம் 21-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஸ்ரீநகருக்கு சென்றது. அங்கிருந்து நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டது.

செஸ் ஒலிம்பியாட்டை புறக்கணித்தது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விளையாட்டுடன் அரசியலை புகுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவிக்கிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பில் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் தொடரில் இருந்து பாகிஸ்தான் விலகிய நிலையில் 187 நாடுகளுடன் செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான துவக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.