சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அப்போலோ மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையத்திடம் எய்ம்ஸ் மருத்துவக் குழு கால அவகாசம் கோரியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க உத்தரவிடக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உதவும் வகையில் மருத்துவ நிபுணர்கள் குழுவை அமைக்க எய்மஸ் மருத்துமனைக்கு உத்தரவிட்டது. இதன்படி, 6 பேர் கொண்ட மருத்துவக் குழுவை எய்ம்ஸ் நியமித்திருந்தது.
ஆறுமுகசாமி ஆணையத்திற்கு கடைசியாக வழங்கப்பட்ட கால அவகாசம் கடந்த ஜூம் 24-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், மேலும் ஒருமாத கால அவகாசம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஆணையத்திற்கு ஒருமாத கால அவகாசம் வழங்கியிருந்தது. ஆணையமும் விசாரணையை முடித்து, அறிக்கை தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஆணையத்திற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில், ஆகஸ்ட் முதல் வாரத்தில் தங்களது இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக எய்ம்ஸ் மருத்துவக் குழு ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஆணையத்திற்கு எய்ம்ஸ் மருத்துவக் குழு சார்பில் பகிரப்பட்டுள்ள தகவலில், “ஆணைய விசாரணையில் பங்கேற்ற மருத்துவர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பின்னரே அவர்கள் இந்தியா திரும்புகின்றனர். எனவே வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் விசாரணை தொடர்பான இறுதி அறிக்கையை தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.