ராமநாதபுரம் ஆயுதப்படை காவலராகப் பணியாற்றியவர், அசோக்குமார். இவர் தன் மனைவியுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவரைவிட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில், கடந்தாண்டு வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக கேணிக்கரை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தங்கள் மகன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அசோக்குமார் பெற்றோர் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸுக்கு மாற்றப்பட்டது.
அசோக்குமார் இறப்பின்போது கைப்பற்றப்பட்ட பொருள்களை கேணிக்கரை போலீஸார் சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அந்தப் பொருள்களை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தபோது அதில் அசோக்குமார் பயன்படுத்திய செல்போன் மாயமாகி இருந்து தெரியவந்தது. இது குறித்து கேணிக்கரை போலீஸாரிடம் விசாரித்தபோது அவர்கள் தங்களுக்குத் தெரியாது என பதிலளித்திருக்கின்றனர்.
இதையடுத்து அவர் பயன்படுத்திய மொபைல் போனின் ஐ.எம்.இ நம்பரை ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸாரிடம் கொடுத்து செல்போனை கண்டுபிடித்து தரும்படி சி.பி.சி.ஐ.டி போலீஸார் கேட்டுக்கொண்டனர்.
அதன்படி சைபர் க்ரைம் போலீஸார் அந்த மொபைல் போனை பயன்படுத்தி வந்த நபரை கண்டுபிடித்தனர். அவரைப் பிடித்து நடத்திய விசாரணையில், வசந்தம் நகரில் உள்ள செல்போன் கடையில் வாங்கியதாகக் கூறியிருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து அந்தக் கடை உரிமையாளர் சதீஷ்குமாரிடம் விசாரித்தபோது கேணிக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு போலீஸார் வந்து ரூபாய் இரண்டாயிரத்துக்கு விற்றதாகக் கூறியிருக்கின்றனர்.
அதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கடந்த மூன்று நாள்களாக கேணிக்கரை போலீஸாரிடம் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையின் முடிவில் கேணிக்கரை காவல் நிலையத்தில் எழுத்தராகப் பணியாற்றி வரும் சுரேஷ், ஏட்டு கமலக்கண்ணன் ஆகியோர் செல்போனைத் திருடி விற்றது தெரியவந்ததால் அவர்கள்மீது வழக்கு பதிவுசெய்யவும், இருவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
மேலும், அந்த செல்போன் கடை உரிமையாளர் சதீஷ்குமாரிடமிருந்து திருடி விற்கப்பட்ட மூன்று செல்போன்களை டி.எஸ்.பி ராஜா பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதல் தகராறு ஒன்றில் கைப்பற்றப்பட்ட நகைகளை திருடி விற்பனை செய்ததாகவும் இந்த இரு போலீஸார்மீது புகார் எழுந்திருக்கிறது. இது தொடர்பாகவும் விசாரணை நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருட்டுக் குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை போலீஸார் விற்று சம்பாதித்து வருவதாக எழுந்திருக்கும் புகார் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் விசாரணை நடத்த தென் மண்டல ஐ.ஜி அஸ்ராகர்க் உத்தரவிட்டிருக்கிறார்.