திருச்சி: சாலை சந்திப்புகளில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் திருச்சியில் 22 இடங்களில் தானியங்கி ஃப்ளிங்கர், ஃப்ளாஷர் வகை விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்சி மாநகரில் மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 715 கி.மீ தொலைவுக்கும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறைகளின் கட்டுப்பாட்டில் 95.2 கி.மீ தொலைவுக்கும் சாலைகள் அமைந்துள்ளன.
இவற்றின் வழியாக நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவருகின்றன. எனவே, விபத்துகளை தடுக்கவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் மாநகரில் 31 இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரதிபலிப்பானுடன் கூடிய தானியங்கி எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய இடங்களில் மாநகர காவல் துறையும், மாநிலநெடுஞ்சாலைத் துறையும் இணைந்து வாகனஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில்தானியங்கி எச்சரிக்கை விளக்குகளைப் பொருத்த முடிவு செய்தன.
அதனடிப்படையில், மாநகர காவல் ஆணையரின் ஆலோசனைப்படி, துணை ஆணையர்கள் தேவி(தெற்கு), அன்பு (வடக்கு) ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாநகரிலுள்ள சாலைகளில் ஆய்வு மேற்கொண்டு தானியங்கி விளக்குகளைப் பொருத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்து, மாநில நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளர் கிருஷ்ணசாமி, கோட்டப் பொறியாளர் கேசவன் ஆகியோரிடம் அளித்தனர்.
ஒவ்வொரு சந்திப்பிலும் 2 கம்பங்கள்: அதனடிப்படையில் மாநில நெடுஞ்சாலைத்துறை நிதியின் கீழ் தெற்கு போக்குவரத்துப் பிரிவுக்கு உட்பட்ட ரயில்வே ஜங்ஷன் புதிய இணைப்பு சாலை, பாரதியார் சாலையில் ஆர்.சி பள்ளி சந்திப்பு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, குட்ஷெட் மேம்பாலத்தில் முதலியார்சத்திரம் சாலை சந்திப்பு, கல்லுக்குழி சாலை சந்திப்பு ஆகிய 5 இடங்களில் தலா 2 கம்பங்களில் எல்இடி விளக்குகளால் ஆன தானியங்கி மின்னும் விளக்குகள் (ஃப்ளிங்கர் லைட்) பொருத்தப்பட்டுள்ளன.
அதேபோல, வடக்கு போக்குவரத்துப் பிரிவின்கீழ் கும்பகோணத்தான் சாலை, கல்லணை சாலை, காவிரிக்கரை (ஓயாமரி) சாலை, திருவானைக்காவல் சாலை சந்திப்பு ஆகியவற்றில் 9 இடங்களில் ஒளிரும் விளக்குகள் (ஃப்ளாஷர் லைட்) தற்போது பொருத்தப்பட்டுள்ளன.
சாலை பாதுகாப்பு நிதி: இதுதவிர மாவட்ட ஆட்சியரின் ஏற்பாட்டில் சாலை பாதுகாப்பு நிதியிலிருந்து புத்தூர் ஈவெரா சாலை (அரசு மருத்துவமனை சந்திப்பு), சாஸ்திரி சாலை – அண்ணாநகர் நகர் சாலை சந்திப்பு, பட்டாபிராமன் சாலை சந்திப்பு, உறையூர் நாச்சியார் கோவில் சாலை சந்திப்பு, கரூர் பைபாஸ் சாலை – வி.என்.நகர் சாலை சந்திப்பு, வயலூர் சாலையிலுள்ள காவல் சோதனைச்சாவடி, குழுமணி சாலையிலுள்ள காவல் சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் டெலினேட்டர் ரக ஃப்ளாஷர் விளக்குகளும், மேலரண்சாலை அருணாசலம் சிலை அருகே எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.
நீண்ட தூரத்திலேயே எச்சரிக்கும்
இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து பிரிவு காவல் அதிகாரிகள் கூறும்போது, “திருச்சி மாநகரில் விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காகவும், சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு விபத்தில்லா பயணம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் சாலை பாதுகாப்பு நிதி மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையின் நிதி சுமார் ரூ.42 லட்சம் செலவில் 22 இடங்களில் பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை தானியங்கி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ளது போன்று அதிக வெளிச்சத்தை உமிழக்கூடிய இவ்வகை விளக்குகள், நீண்ட தூரத்தில் வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாநகர சாலைகளில் பல இடங்களில் விபத்துகள் நடைபெற்றாலும், குறிப்பிட்ட 30 இடங்களில் அடிக்கடி விபத்து நடைபெறக் கூடியபகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றில் தற்போது எச்சரிக்கை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ளஇடங்களில் விரைவில் பொருத்தமுயற்சி செய்து வருகிறோம்’’ என்றனர்.
கவனம் பெறுமா சென்னை – மதுரை தேசிய நெடுஞ்சாலை? – சென்னை- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நடைபெறுவதால், மாநகர எல்லைக்குட்பட்ட பஞ்சப்பூர் சாலை சந்திப்பு, எடமலைப்பட்டிபுதூர் சாலை சந்திப்பு, மன்னார்புரம் சர்வீஸ் சாலை சந்திப்பு, மின்வாரிய அலுவலகம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலை பிரிவு சந்திப்புகள், பொன்மலை ஜி கார்னர் சர்வீஸ் சாலை சந்திப்புகள், செந்தண்ணீர்புரம் சர்வீஸ் சாலை சந்திப்புகள், அரியமங்கலம் பழைய பால்பண்ணை சந்திப்பு, சஞ்சீவி நகர் சாலை சந்திப்பு, காவிரிக்கரை (ஓயாமரி) சாலை சந்திப்பு, கும்பகோணத்தான் சாலை சந்திப்பு, இரணியம்மன் கோவில் சர்வீஸ் சாலை சந்திப்பு, ஒய் ரோடு சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் ப்ளிங்கர், ஃப்ளாஷர் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.