அரியலூர் மாவட்டம், கோவிலூர் கிராமத்தைச் சேர்ந்த பிச்சை பிள்ளை என்பவர், அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணையத்தில் புகார்மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து நம்மிடம் பேசிய பிச்சை பிள்ளை, “வெளியூர் வேலைக்காகச் சென்றபோது எனது வீடு, விவசாய நிலத்தைப் பக்கத்து வீட்டுக்காரர் வருவாய்த்துறையினரின் உதவியுடன் அவர் பெயருக்குப் பட்டாமாற்றம் செய்துவிட்டார். எனவே என்னுடைய நிலத்தை அளந்து தனிப் பட்டா வழங்க வேண்டும் என்று கோரி அரியலூர் வட்டாட்சியரிடம் கடந்த 2015-ம் ஆண்டு சேவை கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்திருந்தேன்.
ஆனால், விண்ணப்பம் செய்து ஐந்து மாதங்களாகியும் பட்டா கிடைக்கவில்லை. இந்த நிலையில், என்னை தொலைப்பேசியில் தொடர்புகொண்ட நில அளவையர் ஒருவர், `நில அளவை செய்து பட்டாமாற்றம் செய்து கொடுக்கிறேன். அதற்கு ரூ.25 ஆயிரம் செலவாகும்’ எனக்கேட்டார். நான் அதற்கு, `அவ்வளவு பணம் என்னால் கொடுக்கமுடியாது.
என்னால் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே கொடுக்க முடியும்’ என்று கூறி, திருமானூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் இரு அதிகாரிகள் முன்னிலையில் நில அளவையாளரிடம் ரூ.5,000 கொடுத்தேன். அதன் பிறகும் நில அளவை செய்து பட்டா கொடுக்கவில்லை. இந்த நிலையில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் முறையிட்டதோடு என்னிடம் வாங்கிய லஞ்சப் பணத்துக்கு 12 சதவிகித வட்டியுடன் கொடுக்கவேண்டும் என்று புகார் அளித்தேன்.
என்னுடைய மனுவை அரியலூர் மாவட்ட நுகர்வோர் ஆணைய நீதிபதி ராமராஜ் விசாரித்தார். `கடந்த 2015-ம் நிலத்தை அளக்கப் பணத்தைக் கட்டியிருக்கிறார். ஆனால் அவருக்கு எந்த பதிலும் தராமல் விட்டது அரியலூர் வட்டாட்சியரின் சேவை குறைபாட்டைக் காட்டுகிறது. இதனால் நான்கு வாரக் காலத்துக்குள் நில அளவை செய்து தனிப் பட்டா கோரும் விண்ணப்பம்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால் தாசில்தார், நில அளவையர் ரூ.5,000 கட்ட வேண்டியிருக்கும்.
மேலும், அரசு ஊழியர் சட்டப்படி செய்ய வேண்டிய கடமையைப் பணம் பெற்றுக்கொண்டு செய்வதும் சட்டவிரோத செயல். வேலையை முடித்துக்கொடுக்கப் பணம் கொடுப்பதும் வாங்குவது குற்றம். இதற்கு காவல்துறையினரிடமோ அல்லது சம்பந்தப்பட்ட துறையிடம் புகார் அளிக்கவேண்டும்’ என உத்தரவிட்டார்” என்றார் பிச்சை பிள்ளை.