சென்னை: புகையிலைப் பொருட்களின் உறையின் மீது புதிய எச்சரிக்கைப் படங்கள் வெளியிடுவது தொடர்பான அறிவிப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
சிகரெட், பீடி உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து எச்சரிக்கும் வகையில், அந்தப் பொருட்களின் உறையின் மீது எச்சரிக்கைப் படங்கள் அச்சிடும் நடவடிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த எச்சரிக்கைப் படங்கள், ஒவ்வோர் ஆண்டும் சுழற்சி முறையில் மாற்றப்படும். இந்திய தன்னார்வ சுகாதாரக் கழகத்தின் உறுப்பினர்கள் ஆய்வு நடத்தி, அதன் அடிப்படையில் உறையின் மீது அச்சிடப்பட வேண்டிய படங்கள் தேர்வு செய்யப்படும்.
இந்நிலையில், புதிய படங்கள் தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் வாய்ப் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறிக்கும் வகையிலான படங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இந்த புதிய எச்சரிக்கைப் படங்கள் நடைமுறைக்கு வரும் கூறப்பட்டுள்ளது.