அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றத்திற்கே திருப்பி அனுப்பியுள்ள உச்சநீதிமன்றம், 3 வாரத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க அறிவுறுத்தியுள்ளது. இவ்வழக்கின் இன்றைய விசாரணையின்போது, மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் இணைய வாய்ப்பு உள்ளதா? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிரித்தபடி கேள்வி எழுப்பினர்.
ஈபிஎஸ் தரப்பு ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தை நடத்த தடை விதிக்கக்கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்திருந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மீண்டும் இருதரப்பும் இணைய வாய்ப்பு உள்ளதா என நீதிபதிகள் சிரித்தபடியே கேள்வியெழுப்பினர். இதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தரப்பில், இல்லை என பதிலளிக்க வழக்கறிஞர்கள் முற்பட்டபோது, அது உங்கள் பிரச்னை என கூறியவாறே தலைமை நீதிபதிகள் விசாரணையை தொடர்ந்தனர்.
அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும் அங்கு எடுக்கப்பட்ட முடிவுகளை சட்டவிரோதம் என அறிவித்து ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது என்றும் இந்த விவகாரத்தில் எந்த விதிகளும் மீறப்படவில்லை எனவும் ஈபிஎஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கை மறுபரிசீலனைக்காக சென்னை உயர்நீதிமன்றத்திற்கே அனுப்புவதாகவும் 3 வார காலத்திற்குள் விசாரணையை நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுகள் இந்த வழக்கின் விசாரணையை பாதிக்காது என கூறிய தலைமை நீதிபதி அமர்வு, அடுத்த உத்தரவு வரும்வரை அதிமுகவில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM