பிரம்மாண்ட செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பிரதமர் மோடி, முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலை பாடகி தீயுடன் சேர்ந்து பாடிய உற்சாகத்தில் இருக்கிறார், பாடகி கிடாக்குழி மாரியம்மாள். ‘கர்ணன்’ படத்தில் இடம்பெற்ற `கண்டா வரச்சொல்லுங்க’ கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான மாரியாம்மாளை செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் பாடிய அனுபவம் குறித்து வாழ்த்துகளுடன் பேசினோம்..
“பிரதமர், முதல்வர் முன்னாடி பாடினது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. இவ்ளோ சீக்கிரம் இந்த வாய்ப்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. ஊர்லருந்து எல்லோரும் போன் பண்ணி வாழ்த்தினாங்க. எனக்கு, இப்போ 53 வயசாகுது. 50 வயசுலதான் சினிமா வாய்ப்பே வந்தது. அதுக்கு முன்னாடி, “திமுகவுக்காக நானும், என் கணவரும் நிறைய பாடல்களை இயற்றிப் பாடியுள்ளோம். எங்க குடும்பமே திமுக குடும்பம். ஒருமுறை ஓப்பன் லாரியில் நின்று பாடும்போது கலைஞர் அய்யாவும் ஸ்டாலின் சாரும் காரை நிறுத்தி எங்களுக்கு கைகொடுத்துட்டுப் போனாங்க. அப்போ, ஸ்டாலின் சார் இளைஞரணி செயலாளரா இருந்தார். இப்போ, அவர் முதல்வரானதுக்கு அப்புறம் அவர் முன்னாடி பாடினது வாழ்க்கையில மறக்கவே முடியாதது!”.
தீயும் அறிவும் பாடிய ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாடலுக்குள், தற்போது நீங்கள் எப்படி வந்தீர்கள்?
“சந்தோஷ் நாராயணன் சார்தான் போன் பண்ணி கூப்பிட்டாங்க. அறிவு தம்பியும் தீயும்தான் ‘எஞ்சாயி எஞ்சாமி’ பாட்டைப் பாடினாங்க. “இது பயங்கரமான ஹிட் பாடலாச்சே? அறிவு ஏன் வரலை”ன்னு கேட்டேன். ‘அறிவு அமெரிக்கா போயிருக்காரும்மா. திடீர்னு இந்த நிகழ்ச்சியை வச்சிருக்காங்க. அவரால வரமுடியலை’ன்னு சொன்னாங்க.
நான் இந்த நிகழ்ச்சியில பாடணும்னு தீக்கு ரொம்ப ஆசை. அதனால்தான், என்னை வரவச்சாங்க. 23-ம் தேதியே சென்னை வந்துட்டேன். நிகழ்ச்சியில் பாடும்போது மறந்துடுவேன்னு முன்னாடியே என்னை பாடவச்சி ரெக்கார்ட் பண்ணிக்கிட்டாங்க. அந்தப் பாட்டுல ஒப்பாரி வரிகள் வருமில்லையா? அதையும் அறிவுதான் பாடினாப்ல. அந்தக் குரல் எனக்கு அப்படியே செட்டாகும்னு பாட வச்சாங்க. அவங்க எதிர்பார்த்த மாதிரியே செட்டும் ஆச்சு. அறிவு பாடிய ராப் வரிகளுடன் என்னுடையதையும் சேர்த்து போட்டார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே பாடியதில் ரொம்ப சந்தோஷம்”. என்றார் மகிழ்ச்சியுடன்.