ஹரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தின் புத்தி சமைன் கிராமத்தைச் சேர்ந்த 85 வயதான ஃபுலா தேவி, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி இறந்ததாக அரசு பதிவுகள் தெரிவிக்கின்றன. மூதாட்டி ஒருவர் உயிருடன் இருக்கும் போது, அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் இவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். தினமும் அதிகாலை 5 மணிக்கு தனது வீட்டின் பக்கத்தில் நடந்து சென்று அக்கம் பக்கத்து பெண்களை தினமும் சந்திப்பார் என கூறப்படுகிறது. அந்த மூதாட்டி, தனது மாத ஓய்வூதியத்தைப் பெறுவதற்கு மே 6-ஆம் தேதி வங்கிக்குச் சென்ற போது, வங்கி அதிகாரிகள் கூறிய போதுதான் இது தொடர்பான விவரத்தை அவர் அறிந்துகொண்டார். அரசு ஆவணங்களின்படி, அவர் ஏப்ரல் 15 அன்று இறந்தார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளிடம் ஜூன் மாதம் அவர் புகார் அளித்தார். அதன் பிறகு முதலமைச்சரின் புகார் மனு பெறும் மையத்திலும் தனது புகாரை பதிவு செய்தார். இது தொடர்பாக ஃபுலா தேவியின் மகன் சுப்ராம் பானு கூறியதாவது, “எனது தாய் இறந்துவிட்டதாகக் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலிருந்து அவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை” என்றார்.
இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, இறந்துவிட்டதாகப் பதிவு செய்த அதிகாரி யார்? அதற்குக் காரணம் என்ன? எனது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதற்கு யார் காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று மூதாட்டி ஃபுலா தேவி வலியுறுத்தினார். மாத ஓய்வூதியம் கிடைக்காமல் தான் மிகுந்த சிரமத்துக்குள்ளாவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
முதலமைச்சரின் புகார் மையத்துக்கு அனுப்பப்பட்ட மனுவையடுத்து, மாவட்ட சமூக நலத்துறை உடனடியாக நடவடிக்கையில் களமிறங்கியது. இதையடுத்து, தொலைபேசி வாயிலாக மூதாட்டி உயிரோடு இருப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், அதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதும் ஓய்வூதியம் மீண்டும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.