ஒட்டாவா: “இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுகான அவசியம் எனக்கு தற்போது ஏற்படவில்லை” என போப் பிரான்சிஸ் தெரிவித்திருக்கிறார்.
போப் பிரான்சிஸ் இந்த வாரம் தொடக்கத்தில் கனடாவுக்கு பயணம் சென்றார். அப்பயணத்தில் கனடாவில் பூர்விக பழங்குடி மக்களுக்கு எதிராக 19-ம் நூற்றாண்டில் கத்தோலிக்க தேவாலயங்களால் நடத்தப்பட்ட கொடூரக் குற்றங்களுக்கு போப் பிரான்சிஸ் தார்மிக மன்னிப்புக் கேட்டது உலக அளவில் பாராட்டப்பட்டது.
இந்த நிலையில், போப் பிரான்சிஸ் தனது வரலாற்று சிறப்புமிக்க கனடா பயணத்தை முடித்திருக்கிறார். பயணத்தின் முடிவில் போப் பிரான்சிஸ் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது அவரது ஓய்வு குறித்தும், உடல் நலம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு போப் பிரான்சிஸ் அளித்த பதிலில், “இந்த கனடா பயணம் தீவிரமாகவும் ஆழமாகவும் இருந்தது. இன்று வரை ஓய்வுக் கதவை நான் தட்டவில்லை. என்னால் பதவி விலக முடியும். ஆனால், ஓய்வுக்கான அவசியம் தற்போது எனக்கு ஏற்படவில்லை.
உடல் நிலையை கருத்தில் கொண்டால் பதவி விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டிய நேரம் விரைவில் வரக்கூடும். ஆனால், இப்போது இல்லை. இந்த வயதில் எனது முழுங்கால் வலியுடன் என்னால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தேவாலயத்திற்கு தொடர்ந்து சேவை செய்ய நினைக்கிறேன். அதற்கு என்னை நான் ஆரோக்கியமாக வைத்து கொள்ள வேண்டும்” என்றார்.
போப்பின் மன்னிப்பிற்கான காரணம் என்ன? – கனடாவில் கத்தோலிக்க தேவாலயத்தால் இயங்கிய பள்ளிகளில், கனடாவில் பூர்வ பழங்குடிகளாக இருந்த மெடிஸ், இனுய்ட் போன்ற பழங்குடி மக்களின் பிள்ளைகள் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர். சுமார் 1,50,000-க்கும் அதிகமான பழங்குடிகளின் பிள்ளைகள் 1870-ஆம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டங்களில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு பழங்குடி மாணவர்கள் கலாசார ரீதியாக துன்புறுத்தப்பட்டதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டது பிற்காலங்களில் நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது. இது வாடிகனை நோக்கி பல கேள்விகளை எழுப்பவும் காரணமாகியது.
இந்தச் சூழலில் இந்தத் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று போப் பிரான்ஸிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை கனடாவுக்கு பயணம் மேற்கொண்டார். பயணத்தின் முக்கிய நோக்கமான தனது மன்னிப்பை ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் முன் போப் பதிவுச் செய்தார்.