ஒரு மாட்டுக்கு மாதம் ரூ 900 … மத்திய பிரதேசம் போல தமிழ்நாட்டிலும் வேண்டும்!

காவிரி டெல்டா மாவட்டங்கள் -விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் குறை தீர்த்தல் கூட்டத்தில் (29-7-2022) கீழ்க்கண்ட முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

கோரிக்கை

இதுபற்றி விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் ஆறுபாதி.கல்யாணத்திடம் பேசினோம்.

“காரீப் பருவம் கொள்முதல் துவக்கம், புதிய விலை அமலாக்கம் ஆகியவை ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் அமல்படுத்த வேண்டும். மேலும் தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைத்தபடி , மொத்த உற்பத்தி செலவுக்கு மேல் 50 % கூடுதல் ( C 2 +50 %) படி நெல் விலை (CACP Paddy C2 Price Quintal Rs 1805 + 50%  குவிண்டால் ரூ  2,700  வழங்க வேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நடைபெறும் நெல் கொள்முதல், விவசாயிகள், நஷ்டமடையாமல் அவதிக்கு உள்ளாகாமல் சிறப்பாக நடைபெறவும், கொள்முதல் நிலைய முறைகேடுகள் தவிர்க்கவும், காவிரி டெல்டாவின் அனைத்து மாவட்டங்களிலும் தனித்தனியாக தொடர்புடைய உணவுத்துறை செயலாளர், நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் கலந்து கொள்ளும்  சிறப்பு ஆலோசனை கூட்டம் உடனே  நடத்த வேண்டுகிறோம்.

இதில் 20% ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதல் செய்வது, டிராக்டர் மூலம் இயங்கும் நடமாடும் நெல் உலர்த்துவான்கள், தாலுகா அளவில் 30,000 டன்கள் நவீன உலோக சேமிப்பு கலன்கள் நிறுவுதல், திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை முழுமையாக கைவிடுதல், பற்றி முடிவு  செய்ய வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில், வெளி மாவட்ட நெல்லை தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள் கொண்டுவந்து ,கொள்முதல் நிலையங்களை ஆக்கிரமித்து கொண்டு  காவிரி டெல்டா விவசாயிகள் நலன்கள் பாதிக்கும் வகையில் செயல்படுவது முற்றிலும் தடுக்க வேண்டுகிறோம்.

பருத்தி கொள்முதல் தொடக்கம் முதல் தனியார் வணிகர்கள் மறைமுக கூட்டு ஒப்பந்தம் செய்து வருவதை முற்றிலும் தடுக்க வேண்டுகிறோம்.

Mayiladuthurai collector office

தமிழக வேளாண் துறை ‘குறுவை தொகுப்பு உரம்’ வழங்க தொடக்க கூட்டுறவு சங்கங்களில் டி.ஏ.பி. உரம் வரவில்லை என்று சொல்கிறார்கள். மேலும் குறுவை தொகுப்பு ஒரு விவசாயி, ஒரு ஏக்கர் என்ற திட்டத்தால் அதிக விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்ற நிலைக்கு மாறாக, ஒரு குடும்பத்திலுள்ள நபர்கள் அனைவரும் ஒரு ஏக்கர் என்று பதிவு செய்யும் தவறு நிகழ்கிறது.

இது போன்ற தவறுகள் நடக்காமல் தடுக்க ஒரு விவசாயி , இரண்டு ஹெக்டேர் என்ற நடைமுறை எளிதானது. இதுபோன்ற திட்டங்களுக்கு மாற்றாக தமிழக அரசு, தெலங்கானா  மாநிலத்தில் உள்ள (Rythu Bandhu ) “ரயத்து பந்து”  திட்டம் போல் ஒரு ஏக்கருக்கு இரண்டு பருவங்களுக்கு ரூ 10,000 (பத்தாயிரம் ரூபாய்)   உச்சவரம்பின்றி வழங்குவது போல் வழங்க வேண்டுகிறோம். மேலும் தமிழக அரசு மாவட்டம்தோறும் இயற்கை விவசாயத்தை பெருக்க மாவட்ட அளவில் இயற்கை விவசாய ஆர்வலர்கள் குழு மூலம் கிராமங்களில் பயிற்சி அளிக்க வேண்டும்.

இயற்கை விவசாயத்தை முக்கியப்படுத்த மத்திய பிரதேச அரசு நாட்டு பசு வளர்க்க, ஒரு மாட்டுக்கு  மாதம் ரூ 900 வழங்குவதை முன்னுதாரணமாக கொண்டு, இயற்கை விவசாயத்தை முக்கியப்படுத்தி திட்டங்களை செயல்படுத்த வேண்டுகிறோம்.

பாரத பிரதமரின் வேளாண் பயிர் காப்பீட்டு திட்டம் PMFBY  நடப்பு குறுவை பருவத்துக்கு, தமிழகத்தில் அமல்படுத்த வில்லை என்பது வருத்தமளிக்கிறது. மேலும் தற்போதைய PMFBY பயிர் இழப்பீடு கணக்கிடும் முறையின் குறைபாடுகள், வெளிப்படையற்ற தன்மை காரணமாக தேசிய அளவில் சுமார் 28 % விவசாயிகள்  மட்டுமே இழப்பீடு பெறுகின்றனர். 72 % விவசாயிகளுக்கு ஒரு ரூபாய்கூட இழப்பீடு கிடைக்கவில்லை என்பதை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஆறுபாதி.கல்யாணம்

எனவே இந்த திட்டத்தை மாற்றி அமைத்து பயிர் காப்பீடு செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்த பட்சம் 20 % ஊக்கத்தொகை அடிப்படை இழப்பீடாக கிடைக்கும் வகையில் வரும் சம்பா பருவம் முதல் மத்திய அரசு செயல்படுத்த தமிழக அரசு வலியுறுத்த வேண்டுகிறோம். 

ஏற்கனவே காவிரி டெல்டாவில் நான்கு மாவட்டங்களிலும், 100 வருவாய் கிராமங்கள் / கிராம ஊராட்சிகள், தேர்வு செய்து நவீன தகவல் தொழில் நுட்பம் இணைந்த தன்னிறைவு பசுமை கிராமங்கள் திட்டம் செயல்படுத்த தமிழக அரசை  வேண்டியுள்ளோம். இது தொடர்பாக தமிழக வேளாண்துறை செயலர், வேளாண்மைதுறை இயக்குனர் அளவில் விரைவில் ஆலோசிக்க வேண்டுகிறோம். தீர்க்கக்கோரி அளிக்கும் விண்ணப்பங்களுக்கு  15 தினங்களில் பதில் அனுப்பவும், ஒரு மாதத்தில் தீர்வு காணவும் வேண்டுகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.