ஒரு மாதமாக அமையாமல் இருக்கும் அமைச்சரவை! மகாராஷ்டிரா இழுபறிக்கு காரணம் என்ன?

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை உடைத்து பாரதிய ஜனதா கட்சியுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்து இன்றுடன் ஒரு மாதமாகிறது. முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதலமைச்சராக தேவேந்திர பட்நாவிசும் இருந்து வரும் நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அறிகுறியே இன்னும் தெரியவில்லை.
தற்போது முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அனைத்து துறைகளையும் கையாண்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில், இருவரும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக பிரமுகர்களை சந்திப்பதற்காக ஆறு முறை டெல்லிக்கு சென்று வந்துள்ளனர். ஆனால் அமைச்சரவை குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.
Eknath Shinde takes oath Maharashtra CM, Devendra Fadnavis as his deputy -  India News
பாரதிய ஜனதா கட்சி வசம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், ஷிண்டே பிரிவு சிவசேனாவில் 40 எம்எல்ஏக்கள் வரை உள்ளனர். எனவே முக்கிய துறைகளை ஒதுக்குவதில் இரு கட்சிகளிடையே இழுபறி நீடிப்பதே அமைச்சரவை பதவியேற்காமல் இருக்க முக்கிய காரணமாக கூறப்படுகிறது. சிவசேனாவின் ஷிண்டே முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், உள்துறை, நிதித்துறை, சமூக நீதி மற்றும் பழங்குடியினர் ஆகிய முக்கிய துறைகளை பெற பாஜக மும்முரம் காட்டுவதாகவும் வெகுஜன மக்களிடம் கட்சியை கொண்டு செல்ல இத்துறைகள் தங்கள் வசம் இருக்க வேண்டும் என்றும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Devendra Fadnavis Falls In Line, Accepts
அடுத்த மூன்று நாட்களில் அமைச்சரவை அமைக்கப்படும் என்று ஷிண்டே ஜூலை 27 அன்று தெரிவித்தார். ஆனால் அமைச்சரவை அமையாமல் போவதற்கு 2 முக்கிய காரணங்கள் சொல்லப்படுகின்றன. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் முக்கிய துறைகளை கேட்டு குறிவைப்பதும், அதே துறைகளை பாஜக சீனியர் எம்.எல்.ஏக்கள் கேட்பதும் நீடிக்கும் இழுபறிக்கு முதல் காரணம் ஆகும்.
Shiv Sena MP tweets Fadnavis contact list meme on 2-member Shinde cabinet |  Latest News India - Hindustan Times
அடுத்து 2024 மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலில் மிக வலுவாக களம் காண, தங்கள் கட்சியின் செயல்திறனை மேம்படுத்த திட்டமிட்டுள்ள மாவட்டங்களில் உள்ள எம்.எல்.ஏ.க்களை அமைச்சர்களாக்கி அதன் மூலம் மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை அம்மாவட்டங்களில் மட்டுப்படுத்தவும் பாஜக வியூகம் வகுப்பதால் இழுபறி நீ…ண்டு கொண்டே செல்கிறது. ஷிண்டேவுடன் இருக்கும் எம்.எல்.ஏ.க்களிடம் அதிருப்தி எழுந்தால் அது ஆட்சிக்கே ஆபத்தாக அமைந்து விடும் என்பதால் அமைச்சரவை அமையும் போது புதிய பிரச்னையை மகாராஷ்டிரா அரசு எதிர்கொள்ளக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.