கலைஞர் அறக்கட்டளை சார்பில் ரூ. 2,00,000 மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதி வழங்கல்!

சென்னை: கலைஞர் அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் ரூ. 2,00,000 வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கலைஞர் அவர்கள் தனது சொந்த பொறுப்பில் அளித்த ஐந்து கோடி ரூபாயினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை எளிய நலிந்தோர்க்கு உதவித் தொகையாக 2005 நவம்பர் மாதம் முதல் 2007 ஜனவரி மாதம் வரை வழங்கப்பட்டு வருகிறது.

வைப்பு நிதியாக போடப்பட்ட ஐந்து கோடி ரூபாயில், 30வது புத்தகக் கண்காட்சியினை 10.1.2007 அன்று திறந்து வைத்து தலைவர் கலைஞர் பேசுகையில், கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்து அச்சங்கத்துக்கு வழங்கியது போக மீதமுள்ள நான்கு கோடி ரூபாயிலிருந்து வரும் வட்டித் தொகையில் 2007 பிப்ரவரி முதல் தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படுகிறது.

2005 நவம்பர் முதல் இதுவரை வழங்கிய நிதி ரூ.5 கோடியே 55 லட்சத்து 90 ஆயிரம். மேலும் தற்போது வங்கியின் வட்டி விகிதம் குறைந்துள்ளதால் 2022, ஜூன் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக மொத்தம் 8 பேருக்கு தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2,00,000/- (இரண்டு லட்சம்) 30-7-2022 அன்று கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். நிதி பெறுவோர் வெளி மாவட்டங்களிலிருந்து வந்துபோகிற செலவினத்தை தவிர்ப்பதற்காக தபால் மூலம் வரைவுக் காசோலையாக அனுப்பப்படுகிறது”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.