சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்றத்தை காகிதம் இல்லாத மன்றமாக மாற்றி ஐ-பேட் வழங்க வேண்டும் என்று கவுன்சிலர் ஒருவர் கோரிக்கை வைத்தார்.
சென்னை மாநகராட்சி மன்ற கூட்டத்தின் பூஜ்ய நேரத்தின்போது, 61-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கவுன்சிலர் பாத்திமா அகமத் பேசுகையில், “சட்டசபையில், எம்.எல்.ஏ.,க்களுக்கு மடிகணினி வழங்கப்பட்டுள்ளதுபோல், இங்கும் காகிதம் இல்லா கவுன்சில் கூட்டம் நடத்த வேண்டும். கவுன்சிலர்களுக்கு லேப்–டாப் அல்லது ஐ-பேட் வழங்க வேண்டும்.
எங்களுக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அமர்வு படியை கண்ணியமான அளவில் உயர்த்தி தர வேண்டும். கவுன்சிலர்களுக்கும் ஓர் அலுவலக பணியாளர் அமர்த்தி, அதற்கான ஊதியமும் வழங்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
இதனைத் தொடர்ந்து துணை மேயர் மகேஷ்குமார் பேசுகையில், ‘‘கவுன்சிலரின் கோரிக்கையை அரசுக்கு பரிந்துரைத்து, அவற்றை பெற்றுத்தருமாறு துணை மேயர் என்ற முறையில் கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ‘‘கவுன்சிலரின் கோரிக்கைகளை துணை மேயர், கமிஷனருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.