சென்னை: சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பு: விபத்து ஏற்படுவதற்கு முன்தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்வதும், விபத்துக்குப் பின் சம்பந்தப்பட்ட துறையின் திட்டமிடலும் அவசியம். அந்த வகையில், சாலைப் பாதுகாப்புக்கு அறிவியல் ரீதியான அணுகுமுறையை அமல்படுத்த தமிழக காவல் துறையுடன் இணைந்து சென்னை ஐஐடி செயல்படவுள்ளது.
இதற்காக தமிழக அரசின் சாலைப் பாதுகாப்பு சிறப்புப் பணிக்குழு மற்றும் சென்னை ஐஐடி-ன் சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
சென்னை ஐஐடியின் ஆர்.பி.ஜி. ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட சாலைப் பாதுகாப்பு திறன்மிகு மையம், உருவாக்கிய ‘வடிவமைப்பு சிந்தனை’ அணுகுமுறையை சாலைப் பாதுகாப்பில் தமிழக காவல் துறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், அடையாளம் காணப்பட்ட விபத்து நிகழும் இடங்களில் தடயவியல் விபத்துத் தணிக்கைகளை நடத்தவும், மனிதன், வாகனம், சாலைகளின் சூழலைக் கருத்தில் கொண்டு விரிவான, விஞ்ஞான ரீதியான விபத்து விசாரணையை உருவாக்கவும் முடியும், என சென்னை ஐஐடி கூறியுள்ளது.