’கீழே போட்டாலே சுக்கு நூறாக உடைகிறது’.. தரமற்ற செங்கலால் அரசுப்பள்ளி கட்டப்படுவதாக புகார்

களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தரம் இல்லாத செங்கல் கொண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். 
நெல்லை மாவட்டம் களக்காடு நகராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 25 லட்ச ரூபாய் செலவில் புதிதாக வகுப்பறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியினை பொதுப்பணித்துறையினர் தனியாருக்கு ஒப்பந்தம் கொடுத்து அந்த ஒப்பந்தம் மூலமாக பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது கீழ்த்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தப் பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல் தரம் இல்லை என பொதுமக்கள் மற்றும் உள்ளாட்சி பிரமுகர்களால் குற்றம் சாட்டப்பட்டு புகாரளிக்கப்பட்டுள்ளது. தற்போது கட்டடம் கட்ட பயன்படுத்தப்பட்டு வரும் செங்கலானது சரியாக வேகவில்லை என்றும், செங்கல் உறுதித் தன்மை இல்லாததாகவும், உரிய அளவு சைஸ் இல்லாததாகவும் இருப்பதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
image
மேல் செங்கலை கீழே போட்டாலே சுக்குநூராக உடைவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் இந்த பணியினை உடனடியாக நிறுத்தவேண்டும் என பொதுமக்கள மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இது சம்பந்தமாக ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளனர். மேலும் இது குறித்து சீவலப்பேரி ஊராட்சி தலைவர் ஐய்யம்மாள் கூறியதாவது, இங்கு கட்டப்பட்டு வரும் வகுப்பறையானது சரியாக வேகாத செங்கல்கள் வைத்து கட்டப்படுகிறது. தரம் இல்லாமல் அமைக்கப்பட்டு வரும் இந்த கட்டடத்தை முறையாக ஆய்வு செய்து அதன் பின்பு கட்டப்பட வேண்டும். மேலும் கலெக்டரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளேன் என்றார்.
image
மேலும் களக்காடு நகராட்சி கவுன்சிலர் ஆயிஷா மாணவர்களின் நலன் கருதி தரம்மில்லாத செங்கல் கொண்டு கட்டப்பட்டு வரும் கட்டடம் மீது உடனடியாக கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து முன்னாள் மாணவர் ராஜசேகர் கூறுகையில், மாணவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தை உறுதித் தன்மை ஆய்வு செய்து அதன் பின்பு கட்டப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
image
மேலும் தரமில்லாத செங்கல் பயன்படுத்துவதாக எழுந்துள்ள புகார் குறித்து பொதுப்பணி துறையின் பொறுப்பு இளநிலை பொறியாளர் சாமுவேல் என்பவரிடம் கேட்டபோது, புகார் வந்தது உண்மை; புகார் வந்ததை அடுத்து அந்த செங்கல்கள் அனைத்தும் பயன்படுத்தக் கூடாது என ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து வேறு செங்கல் கொண்டுவந்து பணி தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கட்டடத்தை ஆய்வுசெய்ய உள்ளதாகவும் கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.