குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்புக் கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி டெல்லியில் அண்மையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு குறித்து அவர் சர்சைக்குரிய வகையில் பேசினார். இந்த வீடியோ நாடு முழுவதும் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் சர்ச்சை கருத்துக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
மாநிலங்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும்போது, “குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டது முதல் காங்கிரஸ் கட்சி வெறுப்பை உமிழ்ந்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நாட்டின் மிகஉயர்ந்த பதவியில் இருக்கும் முர்முவை அவதூறாகப் பேசியுள்ளார். வாய்தவறி பேசிவிட்டதாக அவர் மழுப்புகிறார். ஆனால் அவர் வேண்டுமென்றே அநாகரிகமாக பேசியிருக்கிறார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வேண்டுமென்றே தான் அவ்வாறு பேசினார். இப்போது மழுப்புகிறார் என்று பாஜக கூறியது.
இந்நிலையில் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி எழுதிய மன்னிப்புக் கடிதத்தில், “நான் தாங்கள் வகிக்கும் பதவியை குறிப்பிட தவறான வார்த்தையப் பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். அது நிச்சயமாக வாய்தவறி நடந்த நிகழ்வே என்று தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.