சர்ச்சை கருத்து கூறிய விவகாரம்.. வாய் தவறி அப்படி கூறிவிட்டேன்! :ஜனாதிபதிக்கு ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கடிதம்

புதுடெல்லி: சர்ச்சை கருத்து கூறிய காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குடியரசுத் தலைவருக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தில் வாய் தவறி அந்த வார்த்தையை கூறியதாக எழுதியுள்ளார்.நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கிய நிலையில், எதிர்கட்சிகளின் தொடர் போராட்டத்தில் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, ஜிஎஸ்டி உள்ளிட்டவை குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் ஆளுங் கட்சியோ எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் உள்ளது. இதனால் தொடர் அமளி ஏற்பட்டு அலுவல்கள் நடைபெறாமல் உள்ளன.இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, ‘ராஷ்டிரபத்தினி’ என காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வாய் தவறி அந்த வார்த்தை வந்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்தார். இருப்பினும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘ராஷ்டிரபத்தினி என்கிற வார்த்தை வாய் தவறி வந்த வார்த்தை என்பதை உறுதியளிக்கிறேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.