கூடலூர் அருகே சாலையில் சென்று சாரை பாம்பை கொன்று விழுங்கிக் கொண்டிருந்த ராஜ நாகத்தை அவ்வழியாக சென்றவர்கள் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் பசுமைமாறா காடுகள் அதிக அளவில் உள்ளன. இந்த சூழல் ராஜ நாகங்கள் வாழ்வதற்கு ஏற்ற காலநிலையாக உள்ளது. அதன்படி கூடலூர் மற்றும் பந்தலூரில் ராஜ நாகங்கள் அதிக அளவில் வாழ்கின்றன. இந்த நிலையில் கூடலூரில் இருந்து கீழ் நாடுகாணி வழியாக கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திற்குச் செல்லும் மலைப்பாதை உள்ளது.
இந்த சாலையில் ராஜநாகம் ஒன்று சாரை பாம்பை வேட்டையாடி விழுங்கிக் கொண்டிருந்த காட்சியை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துள்ளனர். பொதுவாக ராஜ நாகங்கள் அதிகம் கூச்சம் சுபாவம் கொண்டவை மனிதர்களை பார்த்தால் அந்த இடத்தை விட்டுச் சென்று பாதுகாப்பான இடங்களில் பதுங்கிக் கொள்ள பார்க்கும்.
ஆனால், இந்த ராஜ நாகமோ மனிதர்களை கண்டு அச்சமடையாமல் தன்னுடைய இரையை எப்படியாவது விழுங்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் சாலையிலேயே இருந்துள்ளது. இந்த காட்சியை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் நீண்ட நேரமாக பார்த்துள்ளனர். இந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM