Kiruthiga udhayanidhi says we should celebrate death: சாவு வண்டியில் போயிருக்கேனானு கேக்குறீங்களா என சிரித்துக் கொண்டே, தனது புதிய வெப் சீரிஸ் பற்றி விளக்கமளித்துள்ளார் கிருத்திகா உதயநிதி.
உதயநிதி ஸ்டாலினின் மனைவியான கிருத்திகா உதயநிதி வணக்கம் சென்னை, காளி போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ள பேப்பர் ராக்கெட் என்ற வெப் சீரிஸை இயக்கியுள்ளார். இந்த வெப் சீரிஸ் இன்று வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் கிருத்திகா உதயநிதி.
அப்போது, பேப்பர் ராக்கெட் வெப் சீரிஸ் ஜீ5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது. குழந்தைகளுடன் குடும்பமாக பார்க்க கூடிய வகையில் இந்த வெப் சீரிஸை எடுத்துள்ளோம். பார்த்த எல்லோரும் மகிழ்ச்சியோடு கருத்து தெரிவிப்பது, எங்கள் நோக்கம் நிறைவேறி உள்ளதாக தெரிகிறது. இதை படமாக எடுக்க முடியாது, எழுதும்போதே வெப் சீரிஸ் என்று முடிவு செய்து தான் எடுத்தேன்.
சாவு என்பது நம் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை நாம் எல்லோரும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அது ஏன் சோகமா, வலியா மட்டும் இருக்கணும், அதன் இன்னொரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்த தான், சாவை கொண்டாடும் வகையில் காட்சிகள் உள்ளது. நாம் சாவுனு சொல்றதுக்கே பயப்படுறோம். அதனால் தான் இந்த கதையில் சாவு வண்டியில் ட்ரிப் என்ற கான்செப்ட்டை வைத்தேன். சாவும் ஒரு ட்ரிப் தான். நாம் செத்த பிறகு என்ன நடக்கும் என யாருக்கும் தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒரு கற்பனை இருக்கும். சாவு எனும்போது நாம் அழுகிறோம், அதேநேரம் இறந்த ஒருவரை ஏதோ ஒரு பயணத்திற்கு கூட்டிச் செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டால் ஆறுதலாத் தானே இருக்கும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
அப்போது, நீங்க டிரிப் போயிருக்கிங்களா என கேட்டபோது, சாவு வண்டியிலயா என சிரித்துக் கொண்டே கிருத்திகா உதயநிதி கேட்க, செய்தியாளர் இல்ல சாதாரண டிரிப் போயிருக்கிங்களா என கேட்க, நிறைய போயிருக்கேன், தமிழகம் முழுவதும் பயணம் செய்து இருக்கேன் என சொல்கிறார்.