டெல்லி : அனைவருக்கும் எளிய வழியில் நீதி வழங்கும் சட்டத்துறை கட்டமைப்புகளை ஏற்படுத்துவது அவசியமானவை என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைத்திந்திய மாவட்ட சட்ட பணி சேவைகள் ஆணைய கூட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லி விஞ்ஞான் பவனில் தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் சார்பாக நடைபெற்ற தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, 75வது சுதந்திர தினத்தின் அமிர்த பெருவிழா கொண்டாடப்படும் இந்த தருணத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு நாட்டை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்ல உறுதியிணையை ஏற்க வேண்டும் என்று கூறினார். தொழில் தொடங்கும் நடைமுறை, மக்களின் வாழும் முறை ஆகியவற்றை எளிமை ஆக்குவது போல், நீதி வழங்கும் சட்டமுறைகளையும் எளிதாக்குவதும் நாட்டின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறினார். நாட்டின் சட்டத்துறை கட்டமைப்புகளை வலுப்படுத்தவும் விரைந்து நீதி வழங்கவும் கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்த பிரதமர், இ- நீதிமன்றம், காணொளி நீதிமன்றம் 24 மணி நேரமும் செயல்படும் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். நாடு முழுவதும் ஏராளமான கைதிகள் அடிப்படை சட்ட உதவிகள் கிடைக்காமல் சிறையில் என்று குறிப்பிட்ட மோடி, விசாரணைக் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துமாறு, விசாரணைக் குழுவின் தலைவர்கள் என்ற முறையில், மாவட்ட நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான பிரச்சாரத்தை மேற்கொண்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தை பிரதமர் பாராட்டினார். மேலும் வழக்கறிஞர்கள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபடுவதை பார் கவுன்சில் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற இவ்விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் யு.யு.லலித், டி.ஒய். சந்திரசூட், சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டனர்.