சென்னையில் கல்லூரி விடுதியில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவேற்காட்டில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில், 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுமதி. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அந்த மாணவி, கல்லூரியின் விடுதியில் தங்கி பயின்று வந்தநிலையில், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
மாணவி சுமதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், நர்சிங் கல்லூரியில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுதி அறையில் மாணவியுடன் தங்கியிருந்த சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் உதவி ஆணையர், ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அறிந்த, மாணவியின் உறவினர்கள் இருவர் கல்லூரிக்கு வந்த நிலையில் கல்லூரி முன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக கல்லூரி வளாகம் முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM