சென்னை: மாணவர்கள் பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, சென்னை கிண்டியில் உள்ள பல்கலை. வளாகத்தின் விவேகானந்தர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு ஆளுநரும், பல்கலை. வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். முதன்மை விருந்தினராக பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்கலை. அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட 69மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்கள், சான்றிதழ்களை நேரடியாக வழங்கினார். இந்த விழாவின் மூலம் 1,813 மாணவர்களுக்கு பிஎச்டி பட்டமும், 31,944 பேருக்கு முதுநிலை பட்டமும், 3 லட்சத்து 34,435 பேருக்கு இளநிலை பட்டமும் வழங்கப்பட்டன.
விழாவில் வரவேற்புரை ஆற்றிய உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, ‘‘தமிழகத்தில் ‘நான் முதல்வன்’, மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக உயர் கல்வித்துறையில் பல சாதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாணவர்கள், வேலை தேடுபவராக இல்லாமல் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற அடிப்படையில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது. அதற்காகவே ‘நான் முதல்வன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மனதில் கொண்டு பட்டம் பெறும் இளைஞர்கள் செயல்பட வேண்டும்.
நாட்டிலேயே உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. நமது மாநிலத்தில் தற்போது 53 சதவீதம் பேர் உயர்கல்வி பயில்கின்றனர். அதிலும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும்’’ என்றார்.
கவுரவ விருந்தினராக பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பட்டம் பெறும் மாணவர்கள் இத்துடன் தங்கள் இலக்கை முடித்துக் கொள்ளாமல் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும். பட்டங்கள் என்பவை வெறும் வேலைவாய்ப்புக்காக மட்டுமல்ல, உங்களது அறிவாற்றலை மேம்படுத்துவதற்காக என்பதையும் உணரவேண்டும். சாதி, மதம், பணம், அதிகாரம், வயது, அனுபவம், பதவி ஆகியவற்றின் தன்மை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஆனால், அறிவு மட்டும்தான் அனைத்தையும் கடந்து ஒரே அளவுகோலோடு அளவிடப்படுகிறது.
தமிழர்கள் எப்போதும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்குபவர்கள். கடல் வணிகம், கடற்படை, கல்லணை, தஞ்சை பெரிய கோயில் என வரலாற்றில் நிலைத்துள்ள பல்வேறு படைப்புகள் முன்னோடியாக தமிழர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத சொத்து. சமூகநீதிக்கு அடிப்படையும் கல்விதான். எனவே, கல்விக்கு எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.
அனைவருக்கும் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடி கல்வி, காலை சிற்றுண்டி, நான் முதல்வன் உட்பட பல்வேறு திட்டங்கள் மூலம் தமிழகத்தில் கல்விப் புரட்சியை நிகழ்த்தி வருகிறோம். இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து தமிழகத்தில் தொழில் தொடங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இதற்கு தேவையான அறிவுத்திறனை உருவாக்கவே ‘நான் முதல்வன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுதோறும் மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வேலை பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிக்கேற்ப நமது இளைஞர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். தொழிற்சாலைகளை தரம் உயர்த்த தொழில் புத்தாக்க மையங்களை உருவாக்கி வருகிறோம்.
வரும் 2026-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 2 மில்லியன் இளைஞர்களின் திறன் மேம்பாடு அடைய வேண்டும். அதில் நீங்கள் இடம்பெற வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் தமிழகத்தில் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும். அதிலும் உங்கள் பங்குஇருக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் வளர்ச்சிக்கு தடையாக எது இருந்தாலும், அதைத் தகர்த்து தொடர்ந்து முன்னேற வேண்டும். அரசியலமைப்பு வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது அவசியமாகும். பழமைவாதங்களை புறந்தள்ளி, புதிய கருத்துகளை ஏற்று, பகுத்தறிவுப் பாதையில் நடைபோட்டால்தான் நீங்கள் கற்ற கல்விக்கு பெருமையாகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.