வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
லண்டன் :பிரிட்டனின் அடுத்த பிரதமரை தேர்வு செய்வதற்கான போட்டியில் லிஸ் டிரஸ் வெற்றி பெற 90 சதவீதம் வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டனில் பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினார். கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக பதவியேற்பார். அதையடுத்து கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது.
இதில் ரிஷி சுனாக் மற்றும் லிஸ் டிரஸ் இறுதிப் போட்டியில் உள்ளனர். பொருளாதார கொள்கைகள் மற்றும் வரி திட்டங்கள் தொடர்பாக இருவருக்கும் இடையே கடந்த சில தினங்களுக்கு முன் ‘டிவி’ விவாதம் நடந்தது. காரசாரமாக நடந்த இந்த விவாதம் தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதில், மிகச் சிறப்பாக வாதாடியதாக சுனாக்குக்கு, 39 சதவீதம் பேரும், லிஸ் டிரசுக்கு 38 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், 47 சதவீதம் பேர் லிஸ் டிரசுக்கும், 38 சதவீதம் பேர் சுனாக்குக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால், இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, பிரிட்டனின் அடுத்த பிரதமருக்கான போட்டியில் லிஸ் டிரஸ் 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அவரே இங்கிலாந்தின் புதிய பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது . இந்திய வம்சாவளி எம்.பி.யான ரிஷி சுனாக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே உள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement