புதுச்சேரியில் அனைத்து சமூக நல அமைப்பினர் கடும் எதிர்ப்பு: தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைப்பதா?

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள தியாக பெருஞ்சுவரில் சாவர்க்கர் பெயர் பலகை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரணியாக வந்த சமூக அமைப்பினர் சாவர்க்கர் உருவ படத்தை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூறும் வகையில் தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை எதிரே தியாக பெருஞ்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுதந்திர போராட்டத்திற்கு எந்த பங்களிப்பும் செய்யாத சாவர்க்கர் பேரை ஆளுநர் தமிழிசை பதித்தார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தவர் அவரது பெயரை எப்படி பதிக்கலாம் என்று கூறி புதுச்சேரியில் சமூகநல அமைப்பினர் திரண்டனர். அவர்கள் கடற்கரை நோக்கி பேரணியாக வந்தனர். அப்போது பொதுபணித் துறை அலுவலகம் அருகே பேரணியை போலீசார் தடுத்த போது சாவர்க்கர் படத்தை போராட்டக்காரர்கள் எரித்தனர். இதேபோல் ஆளுநர் தமிழிசை, சபாநாயகர் செல்வம் ஆகியோர் படங்களையும் எரித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சாவர்க்கர் கல்வெட்டை பதித்தாள் புதுச்சேரியில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.