பெங்களூரு: கர்நாடகாவின் மங்களூருவில் 3 நாட்களில் 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொலை வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்கும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி மங்களூரு அருகேயுள்ள பெல்லாரேவை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு எஸ்டிபிஐ அமைப்பை சேர்ந்த ஃபாசில் (23), சூரத்கலில் மர்ம நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலையை கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மங்களூருவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
மங்களூரு வட்டாரத்தில் கடந்த 3 நாட்களில் 2 படுகொலைகள் நடந்திருப்பதால் அங்கு மத ரீதியான வன்முறை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
என்ஐஏ விசாரணை
பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூரு கொலை வழக்கு தொடர்பாக 6 தனிப்படைகள் விசாரணை நடத்தி வருகின்றன. ஹாவேரியை சேர்ந்த ஜாகீர் (29), பெல்லாரேவை சேர்ந்த முகமது ஷபீக் (28) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 15 பேரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடலோர கண்காணிப்பு
இந்த கூட்டத்துக்கு பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் சட்டம்ஒழுங்கை நிலைநாட்ட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைமேற்கொள்ளப்படும். குறிப்பாக கடலோர கர்நாடகாவில் கண்காணிப்பு பணிகள் அதிகரிக்கப்படும்.
கேரள எல்லையுடன் தொடர்புடைய 55 சாலைகள் காவல் துறை கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும். குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது யோகி அரசின் பாணியில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக நிர்வாகி பிரவீன் நெட்டூருவின் கொலை வழக்கை தேசிய புலனாய்வு பிரிவு விசாரிக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வழக்கில் விரைந்து விசாரணை நடைபெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.