பாகிஸ்தான் நாட்டில் இந்து மதத்தைச் சேர்ந்த 26 வயதுடைய மனிஷா ரூபேட்டா என்ற இளம்பெண் ஒருவர் முதல் முறையாக டிஎஸ்பி ஆகத் தேர்வாகியிருக்கிறார்.
சிந்து மாகாணத்தில் ஜாகோபாத் என்ற இடத்தில் பிறந்தவர் மனிஷா ரூபேட்டா. சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த மனிஷா அவரது குடும்பத்துடன் கராச்சியில் வசித்து வந்திருக்கிறார். மனிஷாவின் 3 சகோதரிகள் எம்.பி.பி.எஸ். படித்து டாக்டர்களாக இருக்கின்றனர். அவருடைய தம்பி ஒருவர் தற்போது எம்.பி.பி.எஸ் படித்து வருகிறார்.
தாயின் ஆசைபடி சகோதர, சகோதரிகளைப் போலவே தானும் எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்று மனிஷா எம். பி.பி.எஸ். நுழைவுத்தேர்வை எழுதியிருக்கிறார். ஆனால் அந்த நுழைவுத்தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. மருத்துவம் படிக்க வாய்ப்பு இல்லாததால் மனிஷா அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வை எழுதி 16-வது இடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து சிந்து மாகாணத்தில் தற்போது டி.எஸ்.பி ஆக தேர்வாகி அதற்கான பயிற்சியும் பெற்று வருகிறார் மனிஷா. `பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் நான் சிறப்பாக செயல்படுவேன்’ என்று அவர் கூறியிருக்கிறார். பாகிஸ்தான் நாட்டில் ஒரு இந்து பெண் டிஎஸ்பி ஆக பதவி ஏற்பது என்பது இதுவே முதல் முறை.