'மராத்தியர்களை அவமதிப்பதா..!' – ஆளுநரை கிழித்து தொங்கவிட்ட உத்தவ் தாக்கரே!

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு, முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, அந்தேரி என்ற பகுதியில், நேற்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசுகையில், “மகாராஷ்டிர மாநிலத்தை விட்டு குஜராத்திகளும், ராஜஸ்தானிகளும் வெளியேறி விட்டால், மும்பையில் பணம் இருக்காது. நாட்டின் நிதி தலைநகராக மும்பை இருப்பதற்கும் அவர்கள் தான் காரணம்” என குறிப்பிட்டார்.

ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியின் இந்த பேச்சு, மாநிலத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மராத்திய மக்களை ஆளுநர் அவமதித்து விட்டார் எனக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றன.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து, சிவசேனா கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உத்தவ் தாக்கரே, மும்பையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, ஹிந்துக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறார். அவரது இந்த கருத்து, மராத்தி பேசும் மண்ணின் மைந்தர்கள் மற்றும் மராத்தி பெருமையை அவமதிப்பது போல் உள்ளது. அவரை வீட்டிற்கு அனுப்புவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை அரசு முடிவு செய்ய வேண்டும்.

ஆளுநர் என்பவர், குடியரசுத் தலைவரின் தூதர். அவர், குடியரசுத் தலைவரின் வார்த்தைகளை நாடு முழுவதும் எடுத்துச் செல்பவர். அப்படிப்பட்ட பொறுப்பில் உள்ள ஆளுநர், தவறுகளை செய்தால், அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பார்கள்? அவர் மராத்தியர்களையும், அவர்களின் பெருமையையும் அவமதித்து விட்டார். மராத்தி மக்கள் மீது ஆளுநருக்கு உள்ள வெறுப்புணர்வு வெளி வந்து விட்டது. மராத்தி மக்களிடம் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கருத்துத் தெரிவித்த மகாராஷ்டிர மாநில முதலமைச்சரும், சிவசேனா அதிருப்தித் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, “அது ஆளுநரின் தனிப்பட்ட கருத்து. அதற்கு தான் ஆதரவு தெரிவிக்கவில்லை” எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.