லக்னோ
உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் வெள்ள நீர் சூழ்ந்த தனது பள்ளிக்குள் நுழைவதற்கு மாணவர்களை நாற்காலிகளை அடுக்கி வைத்து பாலம் போல அமைத்து அதன் மேல் நடந்து சென்றுள்ளார். இந்த காணொலி சமூக வலைத்தளத்தில் வைராலகி வரும் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த சில நாள்களாக கடும் மழை பொழிந்துள்ளது.இதையடுத்து அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில், அங்குள்ள பள்ளி ஒன்றில் அதன் வளாகம் மைதானம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இந்நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர், பள்ளிக்கு நுழைய செய்த காரியம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆசிரியை மழை நீரில் கால்கள் படக்கூடாது என்பதற்காக, அங்கு படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளியில் உள்ள நாற்காலிகளை வாசலில் இருந்து வகுப்பறை வரிசையாக பாலம் போல அடுக்கி வைக்க செல்லியுள்ளார். பின்னர் அந்த நாற்காலி மீது ஏறி ஒவ்வொரு நாற்காலியாக தாண்டி வகுப்பறைக்குள் கால் நனையாமல் செல்கிறார்.
ஆசிரியை கீழே விழாமல் இருக்க பள்ளி மாணவர்கள் முழங்கால் வரை நீரில் நின்று நாற்காலியையும் ஆசிரியையையும் பிடித்துக் கொள்கிறார்கள்.
இந்த சம்பவத்தை உடன் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரை வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சமூக வலைத்தளத்தில் இந்த வீடியோ வைராலகி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் ஆசிரியை செயலுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில், அவர் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.