மும்பை: மஹாராஷ்டிராவில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தானை சேர்ந்தவர்களை அனுப்பினால், இந்தியாவின் நிதி தலைநகரமாக மும்பை இருக்காது என மஹாராஷ்டிரா மாநில கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையின் அந்தேரியில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பேசியதாவது; பலமுறை மஹாராஷ்டிரா மக்களிடம் நான் கூறியுள்ளேன். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தவர்களை இங்கிருந்து அனுப்பினால் உங்கள் கைகளில் பணம் இருக்காது. தற்போது, மும்பை நாட்டின் நிதி தலைநகர் எனக்கூறுகிறீர்கள். அவர்களை அனுப்பினால், இனிமேல் மும்பையை நிதி தலைநகரம் என அழைக்க முடியாது. குஜராத்சை சேர்ந்த மார்வாரி சமுதாய மக்கள் எங்கு சென்றாலும், பள்ளிகள், மருத்துவமனைகள் அமைத்து வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
கவர்னரின் இந்த கருத்து, அங்கு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறுகையில், கவர்னரின் இந்த கருத்துக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவிக்க வேண்டும். பா.ஜ., ஆதரவு பெற்ற முதல்வர் ஆட்சியில் இருக்கும் போது மராத்தியர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளனர். கவர்னருக்கு ஏக்நாத் ஷிண்டே கண்டனம் தெரிவிக்க வேண்டும். கடினமாக உழைக்கும் மராத்தி மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஏக்நாத் ஷிண்டேவுக்கு சுய மரியாதை இருந்தால், கவர்னர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்த வேண்டும் எனக்கூறியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்ரியா சுலே கூறுகையில், அனைவரையும் சமமாக நடத்த வேண்டியது கவர்னரின் பொறுப்பு. மக்கள் இடையே பகத்சிங் கோஷ்யாரி பிரிவினையை ஏற்படுத்துகிறார். மக்களை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார். கவர்னரை உடனடியாக பதவியில் இருந்து விலக வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்த வேண்டும். அடிக்கடி டில்லி செல்லும் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரில் ஒருவர் அடுத்த முறை டில்லி செல்லும் போது பகத் சிங் கோஷ்யாரியை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement