மாதவிடாய்க்கு விடுமுறை அளிக்க வேண்டும் என எந்த அரசு விதிகளிலும் கூறப்படவில்லை. ஆகவே, அது குறித்த எந்தத் திட்டமும் இல்லை என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்திருக்கிறார்.
மாதவிடாய் நாள்களில் பெண் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்த நிலையில், மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவதற்கான திட்டம் மத்திய அரசுக்கு உள்ளதா என, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கேள்வியெழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி…
“1972-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மத்திய குடிமைப் பணியாளர்களுக்கான விடுப்பு விதிகளே மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும். அந்த விதியின்படி மாதவிடாய்க் காலத்தில் பெண்களுக்கு விடுப்பு வழங்குவதற்கான எந்த விதிமுறையும் இல்லை. மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் விடுப்பு வழங்குவது பற்றி இதுவரை ஆலோசிக்கப்படவில்லை. இந்த விதிகளின்படி அரசு, பெண் ஊழியர்களுக்கு அவர்கள் ஈட்டிய விடுப்பு, அரை ஊதிய விடுப்பு, மகப்பேறு விடுப்பு, குழந்தை பராமரிப்பு விடுப்பு, எதிர்பாராத காரணங்களுக்கான விடுப்பு, மருத்துவ விடுப்பு எனப் பல்வேறு வகையான விடுப்புகள் வழங்கப்படுகின்றன.
பொது அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மருந்துகள் வழங்குவதற்காகவும், பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கீழ் உள்ள மருந்துத்துறை, பிரதம மந்திரி பாரதிய ஜனஉஷாதி பரியோஜனா என்கிற திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 8,700-க்கும் மேற்பட்ட ஜனஉஷாதி மையங்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலம் 1 ரூபாய்க்கு நாப்கின் வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.