புதுடெல்லி: பாஜ மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்களின் கடும் அமளி காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின. இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி தொடங்கியதில் இருந்து பல்வேறு விவகாரங்களால் இரு அவைகளிலும் அலுவல்கள் நடக்காமல் முடங்கி வருகின்றன. இதற்கிடையே, ஜனாதிபதி முர்முவை ‘ராஷ்டிரபத்தினி’ என மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நேற்று முன்தினம் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி மன்னிப்பு கேட்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் பாஜ பெண் எம்பிக்கள் நேற்று முன்தினம் அமளியில் ஈடுபட்டனர், அதே சமயம் ‘இந்த விவகாரத்தில் ஏன் என் பெயரை இழுக்கிறீர்கள்’ என சோனியா காந்தி கேட்ட போது, அவையிலேயே ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி சைகை காட்டி சோனியாவை மோசமாக பேசியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இந்நிலையில், நேற்று மக்களவை காலையில் கூடியதும் இந்த விவகாரங்கள் பெரும் புயலை கிளப்பின. ஸ்மிருதி இரானி மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, குஜராத் கள்ளச்சாராயத்தால் பலர் பலியானது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டன. அதே சமயம், சோனியா காந்தி மன்னிப்பு கேட்கக் கோரி பாஜ எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் பலமுறை அவை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மாநிலங்களவையில் சோனியாவை இழிவாக பேசிய ஸ்மிருதி இரானியை பதவி நீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் மையப் பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பதிலுக்கு பாஜ எம்பிக்களும் அமளி செய்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதுவரை அமளியில் ஈடுபட்டதாக மாநிலங்களவையில் 23 எம்பிக்கள் நேற்று வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் திங்கட் கிழமை முதல் மீண்டும் அவைக்கு வர உள்ளனர். 50 மணி நேர போராட்டம் நிறைவு* சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாநிலங்களவை எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக 50 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தினர். இந்த சஸ்பெண்ட் உத்தரவு நேற்றுடன் முடிந்ததால் போராட்டத்தை நேற்று மாலையுடன் அவர்கள் நிறைவு செய்தனர். * ‘ராஷ்டிரபத்தினி’ என்று கூறியதற்காக ஜனாதிபதி முர்முவுக்கு காங்கிரஸ் எம்பி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ேநற்று மன்னிப்பு கடிதம் அனுப்பினார். அதில், ‘நீங்கள் வகிக்கும் பதவியை விவரிக்க ஒரு தவறான வார்த்தையை தவறாகப் பயன்படுத்தியதற்காக எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தவறுதலாக இவ்வாறு கூறி விட்டேன். எனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என கூறி உள்ளார். * சமீப காலமாக பாஜவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி நேற்று அளித்த பேட்டியில், ‘அரசியலமைப்பு பதவி வகிப்பது ஆண், பெண் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சம மதிப்பு அளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் பாலின அவமரியாதை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை,’ என சொந்த கட்சியையே விமர்சித்துள்ளார்.