கிழக்கு கோதாவரி,
ஆந்திர பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி உள்பட கோதாவரி மாவட்டங்களில் பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். இதனால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த நிலையில், கோதாவரி ஆற்றில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
இதில் சீதா நகரம் மண்டலத்திற்கு உட்பட்ட புருஷோத்தம்பட்டினத்தில் ஆற்றங்கரையோரம் துர்க்கை அம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இதனை தரிசிக்க மக்கள் வருவது உண்டு. இந்நிலையில், ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துர்க்கை அம்மன் கோவில் மூழ்கும் நிலை ஏற்பட்டது.
இதனை முன்னிட்டு கோவில் நிர்வாகிகள், மக்கள் யாரும் கோவிலில் இருக்க வேண்டாம் உடனடியாக வெளியேறும்படியும் எச்சரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து, அந்த கோவில் சரிந்து, நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டது. இந்த காட்சிகள் வீடியோவாக பதிவாகி வைரலாகி வருகின்றன. இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று கோவில் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.