புதுடெல்லி: ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்ந்த அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், பவன் கேரா, நெட்டா டிசோசா ஆகியோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. ஒன்றிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியின் 18 வயது மகள் கோவாவில் சட்டவிரோதமாக மதுபான பார் நடத்துவதாக காங்கிரஸ் தலைவர்கள் புகார் எழுப்பினர். இது தொடர்பாக ஸ்மிருதி இரானியை பதவி நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். புகார் எழுப்பிய காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக அமைச்சர் ஸ்மிருதி இரானி டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மினி புஷ்கர்னா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட 3 காங்கிரஸ் தலைவர்களும் இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டரில் வெளியிட்ட பதிவுகள், ரீடிவிட் செய்தது, பதிவிட்ட வீடியோக்கள், போட்டோக்கள் அனைத்தையும் 24 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 3 தலைவர்களும் விளக்கம் அளிக்க சம்மனும் அனுப்பினர்.