பிரிட்டன் பிரதமர் தேர்தலில், லிஸ் டிரஸ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது. பிரதமர் பதவிக்கான போட்டியில் 8 வேட்பாளர்கள் களம் இறங்கிய நிலையில், போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் முன்னிலை வகித்து வந்தார்.
இவருக்கு போட்டியாக 46 வயதான லிஸ் டிரஸ் களத்தில் உள்ளார். தற்போது பிரிட்டன் பிரதமர் பதவிக்கான தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. களத்தில் 2 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் வரும் 4 ஆம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடக்க உள்ளது. இந்த வாக்கெடுப்பானது வரும் செப்டம்பர் முதல் வாரம் வரை நடந்து, 5 ஆம் தேதி முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், யூகவ் என்ற அமைப்பு சார்பில் நடந்த சர்வே ஒன்றில், ரிஷி சுனக்கை 19 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி லிஸ் டிரஸ் வெற்றி பெறுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த தகவலின்படி, ரிஷி சுனக்கிற்கு ஆதரவாக 31 சதவீத உறுப்பினர்களும், லிஸ் டிரஸ்சுக்கு ஆதரவாக 49 சதவீத உறுப்பினர்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஈராக் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட எதிர்ப்பாளர்கள் – என்ன நடந்தது ..?
15 சதவீத உறுப்பினர்கள் ஆதரவு யாருக்கு என்பது தெரியவில்லை. இந்த தேர்தலில், 6 சதவீத உறுப்பினர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகி இருப்போம் என தெரிவித்து உள்ளனர். இதனால், பிரிட்டன் அடுத்த பிரதமர் தேர்தலுக்கான போட்டியில், ரிஷி சுனக்கை விட லிஸ் டிரஸ் முன்னிலை பெறுவார் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, பிரிட்டன் புதிய பிரதமர் தேர்தலுக்கான போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்பது பற்றி ஸ்மார்கெட்ஸ் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில், லிஸ் டிரஸ் 89.29 சதவீதம் வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். அவரே புதிய பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த போட்டியில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என கூறப்பட்டு உள்ளது.