Latest WhatsApp scam: உடனடி செய்தியிடல் செயலியான வாட்ஸ்அப் மூலம் பல பயனர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவ்வப்போது நமக்கு தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் அழைப்புகள் வரும். சில நேரங்களில் நாம் அத்தகைய அழைப்புகளை புறக்கணிப்போம்.
இருப்பினும், மீண்டும் மீண்டும் அத்தகைய அழைப்புகள் நமக்கு வரும்போது, இறுதியாக யார் தான் அழைக்கிறார்கள்? என்பதை அறிய நாம் சில நேரத்தில் அந்த அழைப்பை ஏற்போம். ஆனால் தெரியாத எண்களில் இருந்து வரும் வீடியோ அழைப்புகள் உங்களை சிக்கலில் சிக்க வைக்கும்.
புதிய வாட்ஸ்அப் மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. திரையின் மறுபுறம் நிர்வாணமாக இருக்கும் அடையாளம் தெரியாத பெண் உங்களை அழைக்கலாம். நீங்கள் அழைப்பைத் துண்டிக்க்கும் வரை, வீடியோ பதிவு செய்யப்படும்.
இந்த வீடியோ உங்களுக்கு வாட்ஸ்அப் எண்ணிலோ அல்லது முகநூலிலோ காவல்துறை அலுவலரின் பெயரிலோ திரும்ப அனுப்பப்படுகிறது. மோசடி செய்பவர்கள் இதுபோன்று உங்களை மிரட்டி பணம் பறிக்க வாய்ப்புள்ளது. இது தொடர்பாக பல புகார்கள் காவல்துறை வசம் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அரங்கேறும் மோசடி
பலர் தங்கள் நற்பெயரையும் ஊதியத்தையும் கெடுக்கும் இந்த மிரட்டலுக்கு ஆளாகிறார்கள். இது போன்ற சம்பவங்கள் விவாதிக்கப்படாதது தான் பெரும் சிக்கலை ஏற்படுத்துகிறது. மோசடி செய்பவர்கள் மக்களின் அச்சத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடந்த ஆண்டு இறுதியில் அப்படி ஒரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 35 வயது பேராசிரியருக்கு பேஸ்புக் மெசஞ்சரில் வீடியோ அழைப்பு வந்தது. பேராசிரியர் சுதாரிப்பதற்கு முன் முன், சைபர் மோசடி குற்றவாளிகள் அவரது வீடியோ அழைப்பை பதிவு செய்து, பின்னர் ரூ.20,000 கேட்டுள்ளனர்.
இந்த வீடியோவை வெளியிடுவதாகவும் மோசடி செய்பவர்கள் மிரட்டியுள்ளனர். இருப்பினும், பேராசிரியர் லாவகமாக கணக்கை உடனடியாக நீக்கிவிட்டார். அதன் பிறகு பேராசிரியருக்கு எந்த தொல்லையும் இல்லை என்று கூறப்படுகிறது.
சைபர் காவல்துறை என்ன சொல்கிறது?
இதுபோன்ற வீடியோ அழைப்புகள் மற்றும் மிரட்டலுக்கு பின்னால் ஒரு கும்பல் குழுவாக இயங்கி வருகிறது என சைபர் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். போன் செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதுதான் இவர்களின் வேலை.
கொரோனா காலத்திலும் இதுபோன்ற பல வழக்குகள் காவல் நிலையத்தை நோக்கி படையெடுத்தன. இதுபோன்ற சம்பவங்களை தவிர்க்க, தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளை பெற வேண்டாம்.
மேலும், தெரியாமல் இதுபோன்ற வலையில் விழுந்தால், மிரட்டல் அழைப்புகளை புறக்கணித்து, உடனடியாக சைபர் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கவும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், தெரியாத எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வந்தால் மூன்றாம் தரப்பு செயலிகளின் உதவியுடன் அந்த எண்ணை சரிபார்ப்பது நல்லது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.