அமெரிக்காவில் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 குழந்தைகள் உள்பட 25 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 குழந்தைகள் உட்பட 25 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல் பணி நடந்து வருகிறது. இதனால், உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
இது பற்றி கென்டகி கவர்னர் ஆண்டி பெஷீர் கூறுகையில், “கென்டகி, டென்னசி மற்றும் மேற்கு விர்ஜீனியா உள்ளிட்ட பகுதிகளில் தேசிய பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சமீப நாட்களில் வான் மற்றும் நீர் வழியே நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!
இதற்கிடையே, திடீரென மின் வினியோக பாதிப்பு ஏற்பட்டதில் 13 ஆயிரத்திற்கும் கூடுதலான வீடுகளுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. அமெரிக்காவில் பல கவுண்டி பகுதிகளில் வெள்ள நீரில் வீடுகள் அடித்து செல்லப்பட்டு விட்டன. வெள்ள பாதிப்பினால், சிலர் வீட்டின் மேற்கூரையில் தஞ்சம் அடைந்தனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த வெள்ளப் பெருக்கை ஒரு பேரிடர் என அறிவித்து உள்ளார். கென்டகியில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உதவ வேண்டிய அதிகளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.